அங் மோ கியோவில் 88 வயது முதியவரின் விரல்களிலும் முகத்திலும் வெட்டிய 80 வயது நபர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
வேண்டுமென்றே அபாயகரமான ஆயுதத்தால் வெட்டிக் காயப்படுத்தியதாக டியோ வூ செங் மீது சனிக்கிழமை குற்றம்சாட்டப்பட்டது.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை சாங்கி சிறையில் உள்ள மருத்துவ வளாகத்தில் டியோவை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல்நிலை பற்றி மதிப்பிடப்படும்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அங் மோ கியோ அவென்யூ 3ல் புளோக் 122ல் உள்ள ஷெங் சியோங் பேரங்காடிக்கு வெளியே 88 வயது முதியவரை டியோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி மாலை 5.56 மணிக்கு கேள்வியுற்ற காவல்துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்திலிருந்து கத்தியை கைப்பற்றினர்.
முதியவரின் இடது ஆள்காட்டி விரல் மீதும் வலது கட்டை விரல் மீதும் வாய்ப் பகுதியிலும் டியோ கத்தியால் தாக்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்த்தது.
இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு டியோ பற்றி பாதிக்கப்பட்டவர் குறை கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த டியோ 88 வயது முதியவரைத் தாக்கியதாகச் சொல்லப்பட்டது.

