கொவிட்-19 வெள்ளை அறிக்கை குறித்துத் துணைப் பிரதமர் வோங்
அரசாங்கம் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட விதம் தொடர்பான வெள்ளை அறிக்கையில் முழுமையான தகவல்கள் இடம்பெறவில்லை என்று கூறுவது தேவையற்ற வாதம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
அசல் அறிக்கையை வெளியிடும்படி எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் கேட்டுக்கொண்டதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
முன்னாள் பொதுச் சேவைப் பிரிவுத் தலைவர் பீட்டர் ஹோ தலைமையில் நடத்தப்பட்ட மறுஆய்வின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திரு சிங் நேற்று முன்தினம் கோரிக்கை எழுப்பினார்.
அதில் இருந்து சில தகவல்கள் நீக்கப்பட்ட பிறகே வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
"அரசாங்கம் கிருமிப் பரவலைக் கையாண்ட விதத்தில் சில குறைபாடுகள் இருப்பதை வெள்ளை அறிக்கை ஒப்புக்கொள்கிறது.
"இருப்பினும் அசல் அறிக்கையில் இருந்து எந்தெந்தத் தகவல்கள் அகற்றப்பட்டன என்று சிங்கப்பூரர்களுக்குத் தெரியாது. தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் என்றால் அவை அகற்றப்படலாம்," என்று திரு சிங் கூறினார்.
நேற்று அவருக்குப் பதிலளித்த துணைப் பிரதமர், "நெருக்கடி ஏற்படும்போது, அரசியல், வகிக்கும் பதவி இவற்றுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று திரு சிங் முன்னர் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது இவ்வாறு அவர் கூறுவது ஏன் என்று புரியவில்லை.
"கிருமிப் பரவலைக் கையாண்ட விதம் குறித்து மறுஆய்வு செய்யும் பொறுப்பை அரசாங்கம் திரு ஹோவிடம் ஒப்படைத்தது. தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 2021 வரை இருந்த நிலைமையை ஆய்வு செய்யும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
"ஏனெனில் கிருமிப் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்று அப்போது உறுதியாகத் தெரியாது. அதேநேரத்தில் பல்வேறு அரசாங்க அமைப்புகளும் அவற்றின் கொள்கை, செயலாக்க முடிவுகள் ஆகியவை குறித்த மறுஆய்வைத் தொடங்கின," என்று துணைப் பிரதமர் கூறினார்.
"எனவே திரு ஹோவின் இடைக்கால அறிக்கையோடு இந்த அமைப்புகளின் அறிக்கைகளில் இடம்பெற்ற தகவல்களையும் ஒருங்கிணைத்து, ஆக அண்மையில் நாடு கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அறிக்கையைத் தொகுக்க நேரிட்டது," என்றார் திரு வோங்.
"பிரதமர் அலுவலகம் இவ்வாறு தொகுக்கும் பொறுப்பை ஏற்றது. பின்னர் இதை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடிவெடுக்கப்பட்டது," என்றார் அவர்.
"தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை, அரசாங்கத்தின் செயல்பாட்டைத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.
"திரு ஹோவின் அறிக்கையைக் காட்டிலும் இது விரிவாக இருக்கிறது," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
"திரு ஹோவின் அறிக்கையில் உள்ள விவரங்களையும் அமைச்சுகளின் அறிக்கைகளையும் அனைவரும் தெரிந்துகொள்வது முக்கியம் என்பது என் கருத்து.
"இருப்பினும் இந்தக் கருத்து வேற்றுமைக்கும் தீர்மானத்திற்கு பாட்டாளிக் கட்சி வழங்கும் ஆதரவிற்கும் தொடர்பு இல்லை," என்று திரு சிங் கூறினார்.

