கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்னர் சிங்கப்பூரில் மருத்துவமனைகளுக்கு வெளியே முகக்கவசம் அணிவது மிகவும் அரிதாகவே இருந்தது.
அதனால் சுகாதாரப் பராமரிப்புத் துறையினரின் தேவையை ஈடுகட்டும் அளவில் மட்டுமே நாட்டின் தேசியக் கையிருப்பில் முகக்கவசங்கள் இருந்தன.
இங்குள்ள நிறுவனங்களும் குறைவான செலவில் வெளி நாடுகளில் முகக்கவசத் தயாரிப்புத் தொழிற்சாலைகளை நடத்தி வந்தன என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
பொதுவெளியில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டபோது, அரசாங்கம் உடனடியாகப் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வெளிநாடுகளில் இருந்து முகக்கவசங்களைத் தருவித்தது.
அறுவை சிகிச்சைத் தரத்திலான முகக்கவசங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி அவற்றில் உருவாக்கப்பட்ட முதல் தொகுதி முகக்கவசங்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருந்தன என்றார் அமைச்சர் கான். உள்ளூர் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மறுபயனீடு செய்யக்கூடிய முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கியதை அவர் சுட்டிக் காட்டினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலின் தொடக்கத்தில் சிங்கப்பூரிலேயே முகக்கவசம் தயாரிப்பதற்கு உரிய வசதிகள் ஏன் இல்லை என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
உணவு, இதர அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கப்பல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது.
அத்தியாவசியப் பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகளின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டது என்றார் அவர்.
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் வர்த்தக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பல்வேறு நிறுவனங்கள் மின்னிலக்க மயமாதலைக் கடைப்பிடிக்கத் தொடங்கியதை அமைச்சர் சுட்டினார். குடியிருப்பு வட்டாரக் கடைகளில் கிட்டத்தட்ட 93 விழுக்காட்டுக் கடைகள் மின்னிலக்க நடைமுறைக்கு மாறின என்றார் அவர்.
கிருமிப் பரவலின் தொடக்கத்தில் அரசாங்கம் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று ஆலோசனை கூறியது. சிங்கப்பூரில் போதிய எண்ணிக்கையில் முகக்கவசம் இல்லாததுதான் இதற்கு உண்மையான காரணமாக இருக்கக்கூடும் என்று திரு கியாம் மன்றத்தில் கருத்துரைத்தார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்பவே முதலில் அவ்வாறு ஆலோசனை கூறப்பட்டதாகக் குறிப்பிட்டார். முகக்கவசப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற கவலை அதற்குக் காரணமல்ல என்றார் அவர்.
நன்றாக இருப்போரும் முகக்கவசம் அணியும்படி இங்குள்ள மருத்துவர்கள் நால்வர் முன்னரே வலியுறுத்தியதை திரு கியாம் சுட்டினார்.
"ஆனால், 2020ஆம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதி வரை உலகச் சுகாதார நிறுவனம் முகக்கவசத்தால் பாதுகாப்பு இல்லை என்றே கூறிவந்தது. கிருமித்தொற்று எவ்வாறு பரவுகிறது என்று தொடக்கத்தில் தெளிவாகத் தெரியவில்லை. ஆதாரபூர்வமாக அது தெரியவந்ததும் சிங்கப்பூர் அதன் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்து அதற்கேற்ப பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்தது," என்றார் அமைச்சர் ஓங்.
முதலில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறிய அரசாங்கம் பின்னர் அதற்கு மாறாக அணியும்படி வலியுறுத்தியது. இம்மாதம் 8ஆம் தேதி வெளியான கிருமிப்பரவலை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்த வெள்ளை அறிக்கையில், இது அரசாங்கம் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட விதம் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

