பொதுச் சுகாதார நிலவரம் குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் 'டார்ஸ்கான்' அறிவிப்பு முறையில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய முறையில் வெவ்வேறு நிறங்களின் மூலம் வெவ்வேறு விழிப்புநிலைகள் குறிக்கப்படுகின்றன.
புதிய முறையின்கீழ், நான்கு அடுக்குகளாக அது குறிக்கப்படும்.
முதல் அடுக்கு, கொள்ளை நோய்ப் பரவல் ஏதும் இல்லாத அமைதி நிலையைக் குறிக்கும்.
இரண்டாம் அடுக்கு என்பது கொள்ளை நோய் ஏற்படுத்தும் கிருமி கண்டறியப்பட்டுள்ளதைக் குறிக்கும். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாகத் தேவை என்பதை இது காட்டக்கூடும். தொடர்புத் தகவல் சேகரிப்பு, தனிமைப்படுத்தல், பரிசோதனை, எல்லைக் கட்டுபாடுகள், முகக்கவசம் அணிதல் போன்றவை இவற்றில் அடங்கும்.
மூன்றாம் அடுக்கு பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும். இதில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில், கிருமிப் பரவலைத் தடுக்கும் நீண்டகாலக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரக்கூடும்.
ஆகக் கடைசியான நான்காம் அடுக்கு, பொதுச் சுகாதார அவசர நிலையைக் குறிக்கும். ஆகக் கடுமையான ஊரடங்கு உத்தரவு போன்றவை இந்த நிலையில் நடப்புக்கு வரும்.
கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு சிங்கப்பூர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் ஓங் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
92 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, கிருமிப் பரவலின்போது 'டார்ஸ்கான்' எனப்படும் நோய்ப்பரவல் குறித்த அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டது.
இதனால் சிறிது பீதி ஏற்பட்டதையடுத்து நெருக்கடியின் தீவிரம் குறித்துப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான வேறொரு தொடர்பு முறையை வடிவமைக்கத் தேவை ஏற்பட்டதாக வெள்ளை அறிக்கை தெரிவித்தது. வருங்காலத்திற்கு ஏற்ற வகையில் தொற்றுநோய்ப் பரவல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யவேண்டியதன் அவசியத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

