முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் அண்மை ஆண்டுகளாக மதராஸா பள்ளிகளின் நிர்வாகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது. முன்னாள் முயிஸ் ஊழியர் ஒருவர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது இதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிறது என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று, ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் வான் ஸக்காரியாவின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
ரஸாக் முகமது லாஸிம் எனும் 56 வயது ஆடவர், முயிசின்கீழ் செயல்படும் மதராஸா பள்ளிகளின் மூத்த இயக்குநராகப் பணியாற்றினார்.
அப்போது அவர், தெமாசெக் அனைத்துலக அறநிறுவனம் எனும் லாப நோக்கமற்ற அமைப்பு வழங்கிய நன்கொடையில் இருந்து கிட்டத்தட்ட $785,000 ஏமாற்றியதாகக் கூறப்பட்டது. மேலும், $68,629 நம்பிக்கை மோசடி செய்ததாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
"மதராஸா நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில், சமயப் பள்ளிகள் ஆண்டுதோறும் அவற்றின் நிதித் தணிக்கை அறிக்கையை முயிஸ் மற்றும் இயக்குநர் சபையிடம் சமர்ப்பிப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிக்கடி சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டியதும் அவசியம்," என்று திரு மசகோஸ் கூறினார்.
மதராஸா பள்ளிகளில் மோசடி நடப்பதாகச் சந்தேகம் எழுந்தால் ஊழியர்கள் அதுகுறித்து முயிசிடமோ அமலாக்கப் பிரிவினரிடமோ தகவல் அளிக்கும் நடைமுறையும் அறிமுகம் செய்யப்பட்டதை அமைச்சர் சுட்டினார்.