செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4dae7977-3cbe-40f1-a60e-5f06236bf2c8
-

'சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் தொடர்பில் புகார் ஏதுமில்லை'

நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று முதலீட்டாளர்களிடம் தவறான தகவல்களை வெளியிடுவது 'கிரீன்வாஷிங்' எனப்படுகிறது.

சிங்கப்பூரில் இத்தகைய ஏமாற்று குறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடமோ சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்திடமோ யாரும் புகார் அளிக்கவில்லை என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார். இருப்பினும் அரசாங்கம் இதன் தொடர்பில் தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர். தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு டான் உறுதியளித்தார். பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நேற்று அவர் பதிலளித்தார். 'கிரீன்வாஷிங்' தொடர்பான விவகாரங்கள் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கையாளப்படும் என்று துணையமைச்சர் டான் தெரிவித்தார்.

பெருங்கடல் தொடர்பான ஆய்வுக்கு உதவும் புதிய ஒப்பந்தம்

கடல்வாழ் பல்லுயிர்களின் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய அவற்றின் பயன்பாடு ஆகியவை தொடர்பான புதிய ஒப்பந்தம், சிங்கப்பூர் மாணவர்களும் கடல்துறை நிறுவனங்களும் உலகின் பெருங்கடல்கள் குறித்த ஆய்வு செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது. வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.

தேசிய சட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்டு கடல்துறைப் பல்லுயிர்களின் பயன்பாடு, பாதுகாப்பு குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நேற்று அவர் பதிலளித்தார். ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 4ஆம் தேதி நிறைவடைந்தன. ஐக்கிய நாட்டு நிறுவன உறுப்பு நாடுகள் கடந்த 15 ஆண்டுகளாக இதன் தொடர்பில் பேச்சு நடத்தின. தற்போதைய அனைத்துலகச் சட்டத்தின்கீழ், ஒரு நாட்டின் கடற்கரையில் இருந்து 200 கடல்மைல் தொலைவில் உள்ள நீர்ப் பரப்பு, கடற்படுகை, அந்த வட்டார வான்வெளி ஆகியவற்றில் மீன்பிடிப்போ ஆய்வுகளோ நடத்த அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை உண்டு. ஆனால் வெகு சில நாடுகளே இதைப் பயன்படுத்துகின்றன. இந்த சமநிலையின்மைக்குத் தீர்வுகாண்பது புதிய ஒப்பந்தத்தின் நோக்கம்.