சிங்கப்பூரின் நீதித்துறைக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இன்றி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த காரணத்துக்காக வழக்கறிஞர் எம். ரவி (படம்) ஐந்து ஆண்டு களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் சட்ட அதிகாரி, வழக்கறிஞர் சங்கத்துக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்திருந்தார். இது சிங்கப்பூரின் நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்ததாகக் கூறப்பட்டது.
தமது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 2020ஆம் ஆண்டில் மேல்முறையீடு நிதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு தி ஆன்லைன் சிட்டிசன் எனும் சமூக அரசியல் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் திரு ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்துகளும் சர்ச்சைக்குரியவையாக இருந்தன.
அவர் மீது நான்கு ஒழுங்கின்மை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் மூன்றில் அவர் குற்றம் புரிந்தது நிருபிக்கப்பட்டது.
அவருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
திரு ரவியின் கருத்துகள் சிங்கப்பூரின் நீதித்துறை மீது சந்தேகம் வர வைக்கும் அளவுக்கு இருப்பதாக நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
"சிங்கப்பூரின் நீதித்துறை மீது திரு ரவிக்கு அடிப்படை மரியாதைகூட இல்லை என்பதை அவரது தவறான நடத்தை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது," என்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறினார்.

