வெளிநாட்டவரை ஏமாற்றியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
வெளிநாட்டவரை ஏமாற்றியதாக சிங்கப்பூரரான 53 வயது சோங் சியூ லிம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காரை வாங்கவும் அதை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அந்த வெளிநாட்டவரை $36,000 செலுத்த வைத்ததாகவும் கூறப்படுகிறது. சோங் மீது மோசடிக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அத்துடன் நொடித்துப்போன நிலையிலும் நிறுவனம் ஒன்றின் நிர்வாகக் குழுவில் நீடித்து இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த வெளிநாட்டவரை சோங் ஐந்து முறை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு கார் ஒன்றை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருப்பதாக அந்த வெளிநாட்டவரை சோங் நம்பவைத்ததாக அறியப்படுகிறது.
அந்த காரை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்க சோங் நிர்வகித்த நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் 27,000 அமெரிக்க டாலர் (S$36,000) செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவலை குற்றப் பத்திரிகை குறிப்பிடவில்லை.
விளையாட்டுப் பொருளை மீட்டுக்கொள்ளும் இக்கியா
பிளாவின்காட் மீன்பிடி விளையாட்டுப் பொருளை இக்கியா நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால் அந்த விளையாட்டுப் பொருளின் பாகங்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை என்றும் அவை எளிதில் வெளியாகிடும் என்று தெரியவந்துள்ளது. எனவே, இந்த விளையாட்டுப் பொருளுடன் விளையாடும் குழந்தைகள் அவற்றைத் தவறுதலாக விழுங்கிவிடக்கூடும் என்றும் அது தொண்டையில் அடைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த விளையாட்டுப் பொருளை வாங்கியவர்கள் அவற்றை உடனடியாக தன்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுமாறு இக்கியா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
விளையாட்டுப் பொருளைத் திருப்பிக் கொடுப்பவர்களுக்கு அதற்காக செலுத்தப்பட்ட முழுத் தொகையும் தரப்படும் என்றும் ரசீது ஏதும் தேவையில்லை என்றும் இக்கியா கூறியது.
அந்த விளையாட்டுப் பொருள் காரணமாக சிங்கப்பூரில் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக இக்கியா கூறியது.

