செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
cec8e884-571f-44be-8209-5412ad5a1e29
-

சூறாவளிகளில் சிக்கிய வனுவாட்டுக்கு சிங்கப்பூர் 50,000 டாலர் உதவி

சூறாவளிகள், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பசிபிக் தீவுகளில் ஒன்றான வனுவாட்டுக்கு சிங்கப்பூர் 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கவுள்ளது. மீட்சிப் பணிகளுக்கு அத்தொகை உதவும் என்று வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது.

வனுவாட்டை இம்மாதம் இரண்டு சூறாவளிகள்

அடுத்தடுத்து தாக்கின. இரண்டு நிலநடுக்கங்களாலும் அந்நாடு பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வனுவாட்டு அவசரநிலையை அறிவித்தது.

2025 ஏப்ரல் முதல் சுவைபானக்

கலன்களுக்கு 10 காசு வைப்புத்தொகை

வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நெகிழி போத்தல்களிலும் எஃகு கலன்களிலும் உள்ள பானங்களுக்கு கூடுதலாக 10 காசு வைப்புத்தொகை வசூலிக்கப்படும்.

ஆனால் பயன்படுத்தப்பட்ட அவற்றை மறுசுழற்சிக்காகக் கொடுக்கும்போது பொதுமக்களுக்கு அந்த வைப்புத்தொகை திரும்ப கிடைக்கும்.

வரும் 2025 ஜூலையில் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ள சுவைபானக் கலன்களைத் திரும்பத் தரும் திட்டத்தின் விவரங்களை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று முன்தினம் விளக்கினார்.

150 மில்லிலிட்டர் முதல் மூன்று லிட்டர் வரையிலான சுவைபானங்கள் உள்ள கலன்களுக்கு பத்துக் காசு வைப்புத் தொகை வசூலிக்கப்படும். மேலும், அத்திட்டத்தின்கீழ், 200 சதுர மீட்டருக்கு மேல் பெரிதாக உள்ள சுமார் 400 பேரங்காடிக் கடைகளில், சுவைபானக் கலன்களைத் திரும்பத் தர முனையங்கள் அமைக்கப்படும். அவற்றில் பெரும்பாலானவை, கலன்களை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு காசு கொடுக்கும் அறிவார்ந்த தானியங்கி இயந்திரங்களாக இருக்கும்.

பழைய சரக்குகளைத் தீர்த்துவிட்டு, மறுசுழற்சித் திட்டத்துக்கு ஏதுவான புதுச் சின்னங்களையும் குறியீடுகளையும் புதிய சரக்குகளில் சேர்ப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கு 2025 ஏப்ரல் 1 முதல் ஜூலை 1 வரை மூன்று மாத அவகாசம் வழங்கப்படும்.

போதை ஏற்படுத்தும் பொருள்களைக் கட்டுப்படுத்த சட்டத்தில் மாற்றங்கள்

போதைப் பொருள்களுக்கு எதிரான சிங்கப்பூரின் புதிய சட்டங்களின்கீழ், போதையை ஏற்படுத்த தவறாகப் புழங்கும் எந்தப் பொருளும் மனநிலையை மாற்றும் பொருளாக வகைப்படுத்தப்படும்.

எனினும் மது, கெஃபேன், புகையிலை, உணவுச் சுவையூட்டிகள், சுகாதாரப் பொருள்கள் ஆகியவற்றுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதன்படி போதைப் பொருளின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்திலும் அரசியல் சாசனத்திலும் நேற்று முன்தினம் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

அத்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மனநிலையை மாற்றும் மருந்துகளின் கடத்தல், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, அவற்றைத் தன்வசம் வைத்திருத்தல், உட்கொள்ளுதல் ஆகியவற்றைக் குற்றமாகக் கருதப்படும்.

போதைப் பொருள்களை வைத்திருப்பதற்கான தண்டனையும் திருத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனை 30 ஆண்டு சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டது. இது அக்குற்றத்துக்கான முந்திய பத்தாண்டு அதிகபட்ச சிறைத் தண்டனையைவிட இரு மடங்கு அதிகமாகும்.

ரமலான் மாதத்தில் ஸகாத் ஃபித்ரா தொகையைச் செலுத்த புதிய முறை

சிங்கப்பூரில் ரமலான் மாத நோன்பு இன்று தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் செலுத்தப்படும் ஸகாத் ஃபித்ரா தொகை இவ்வாண்டு ஆளுக்கு $5.00 அல்லது $7.70 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தின் தொடக்கத்தை ஒட்டி சிங்கப்பூர் முஃப்தி நசிருடின் முகம்மது நசிர், "பேரருள், மன்னிப்பு, கருணை, பொறுமை, நன்றியுணர்வு நிறைந்த புனித ரமலான் மாதம் அனைவருக்கும் அமைய வாழ்த்துகிறேன்," என்றார்.

இவ்வாண்டு ஸகாத் ஃபித்ரா தொகையை வழங்க தீவு முழுவதும் உள்ள 16 பள்ளிவாசல்களில் சுயசேவை முனையங்கள் அமைக்கப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று தெரிவித்தது.

சிங்கப்பூரின் முக்கிய உணவான அரிசியின் ஐந்து பவுண்ட் (2.3 கிலோகிராம்) எடையின் விலை, ஸகாத் ஃபித்ரா தொகையாகத் தீர்மானிக்கப்படுகிறது.