வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் ஒன்பதாம் தளத்தில் இருக்கும் வீட்டிலிருந்து சன்னல்வழியாகக் குதிக்க முயன்ற ஆடவர் மீட்கப்பட்டார். போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.
கைதாகாமல் இருக்கத் தப்பியோட முயன்றபோது ஆடவர் மீட்கப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமையன்று பிடோக் நார்த் வட்டாரத்தின் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. இச்சோதனையில் 23லிருந்து 30 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 28 வயது பெண் ஒருவரும் கைதானார்.
கைதானோரில் ஓர் 25 வயது ஆடவர் ஒருவர் வீவக வீட்டு சன்னல் வழியாக வெளியேறியிருக்கிறார். அப்போது அவர் கால் தவறி விழவிருந்தார். பல அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து சந்தேக நபரைப் பாதுகாப்பாக மீட்டனர். அதற்குப் பிறகு அவர் கைதானார்.
ஆடவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவரை விழாமல் தடுக்க முயன்றபோது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி ஒருவரின் வலது கையில் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.