செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3478d911-170d-4b95-aa47-ade1cf119692
-

கொவிட்-19 தனிமை உத்தரவை மீறிய 'எஸ்ஐஏ' சிப்பந்திக்குச் சிறை

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிப்பந்தி ஒருவருக்குத் தனிமை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது; அதை மீறிய குற்றத்திற்காக அச்சிப்பந்திக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான ஃபேபியன் ஏமஸ் கில்பர்ட் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டைக் கடந்த திங்கட்கிழமையன்று ஒப்புக்கொண்டார். நேற்று இவருக்கு ஒரு மாதம், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபேபியன் தனக்கு வழங்கப்பட்ட தனிமை உத்தரவை மீறினார்.

7,000 குடும்பங்களுக்குப் பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள்

நோன்பு மாத காலத்தில் சுமார் 7,000 குடும்பங்களுக்கு 30 வெள்ளி மதிப்புள்ள பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். 'ஆர்எல்ஏஎஃப்' எனப்படும் ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனத்தின் 'பிளெசிங்ஸ் டு ஆல்' நன்கொடை முயற்சியின்கீழ் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

உதவி தேவைப்படுவோர் என்று 'ஆர்எல்ஏஎஃப்' அடையாளம் காணுவோருக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். முக்கியப் பேரங்காடிகளில் பயன்படுத்தக்கூடிய அவற்றை வார இறுதி நாள்களில் சமூக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

சொத்து முகவர்களைப்போல் நடித்து $1.7 மில்லியன் பறிப்பு

இவ்வாண்டு இதுவரை மட்டும் குறைந்தது 305 பேர், சொத்து முகவர்களைப்போல் நடித்து மோசடிச் செயல்களில் ஈடுபட்டோரிடம் மொத்தமாகக் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்திருக்கின்றனர். காவல்துறையினர் நேற்று முன்தினம் வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

சிலர் சொத்து முகவர்களைப் போல் நடித்து ஃபேஸ்புக், கெரொசல் போன்ற தளங்களில் சொத்து விளம்பரங்களைப் பதிவிட்டு மோசடிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விளம்பரங்களில் இருக்கும் கைப்பேசி எண்களின் மூலம் பாதிக்கப்படுவோர் வாட்ஸ்அப் செயலி மூலம் மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மோசடி நிகழ்கிறது.

சொத்து விளம்பரங்களின் நம்பகத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை சரியாகப் படிக்காததை ஒப்புக்கொண்ட சுபாஷ் நாயர்

கொலை வழக்கு ஒன்று சீன இனத்தவர் ஒருவருக்குச் சாதகமாக இருந்ததென உள்ளூர் ராப் இசைக் கலைஞர் சுபாஷ் நாயர் (படம்) இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த விவகாரத்தை ஊடகங்கள் அலசிய விதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதையே தான் சுட்டியதாக அவர் இப்போது கூறியுள்ளார்.

தனது கருத்துகள் நீதித் துறையைக் குறிவைக்கவில்லை என்றும் அவை, அந்த விவகாரத்தின் தொடர்பில் ஊடகங்கள் செயல்பட்ட விதத்தைப் பற்றியவையே என்றும் தனது வழக்கின் இரண்டாம் நாள் நீதிமன்ற விசாரணையில் திரு நாயர் குறிப்பிட்டார். எனினும், விவகாரம் குறித்து வெளிவந்த செய்திகளைப் படிக்காமல் கருத்துகளைப் பதிவிட்டதையும் குறுக்கு விசாரணையின்போது திரு நாயர் ஒப்புக்கொண்டார்.