ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற திட்டங்களில் கடந்த ஆண்டில் ஏறத்தாழ 560,000 பேர் பங்கெடுத்தனர்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய 192,000க்கும் மேற்பட்டோரும் இதில் அடங்குவர்.
2021ஆம் ஆண்டில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற திட்டங்களில் மொத்தம் 660,000 பேர் பங்கெடுத்தனர்.
தகுதிபெற்ற பயிற்சிகளுக்கு ஸ்கில்ஸ்பியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய ஏறத்தாழ 247,000 பேரும் இதில் அடங்கும். எனவே, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பங்கெடுத்தோர் எண்ணிக்கை குறைவு.
கொவிட்-19 நெருக்கடிநிலையைச் சமாளித்து அதைக் கடந்து செல்ல சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 2021ஆம் ஆண்டில் பல பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவ்வாண்டில் ஆக அதிகமான தனிநபர்கள், நிறுவனங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற பயிற்சித் திட்டங்களில் பங்கெடுத்தனர்.
எனவே, 2021ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் பயிற்சித் திட்டங்களில் பங்கெடுத்தோர் எண்ணிக்கை சரிந்தது எதிர்ப்பார்க்கப்பட்டதொன்று என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்படுவதற்கு முன்பு 2019, 2020ஆம் ஆண்டுகளில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கையைவிட ஒட்டுமொத்த அடிப்படையில் கடந்த ஆண்டு பங்கெடுத்தோர் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய சிங்கப்பூரர்களில் தகவல் தொழில்நுட்பம், உணவு, பானம், பாதுகாப்பு ஆகிய துறைகள் தொடர்பிலான பயிற்சித் திட்டங்களுக்கு ஆக அதிகமானோர் பங்கெடுத்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டத்தையும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தொடங்கியது.
சுகாதாரப் பராமரிப்பு, நிபுணத்துவச் சேவைகள் போன்ற பத்து துறைகள் தொடர்பாகவும் நடுத்தர வயது பணி மாற்றம் செய்பவர்களுக்காகவும் இத்திட்டம் 82 பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி 1,000க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டில் ஏறத்தாழ 20,000 நிறுவனங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற பயிற்சி
களில் பங்கெடுத்தனர்.
ஊழியர்கள் பங்கெடுத்த பயிற்சித் திட்டங்களுக்கான கட்டணத்தின் ஒரு பகுதியை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையை 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தின.
"திறன்களை மேம்படுத்தவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் நிறுவனங்களுடன் தனிநபர்களும் ஆர்வம் காட்டுவது உற்சாகமூட்டும் வகையில் உள்ளது," என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி டான் கோக் யாம் கூறினார்