முதியவர் மீது மோதிய பிறகு வானத்தை நிறுத்தாமலும் அவருக்கு எந்தவித உதவி செய்யாமலும் தப்பியோடிய மசராட்டி ஓட்டுநருக்கு நேற்று சிறை, அபராதம் விதிக்கப்பட்டது.
விபத்தில் 85 வயது ஃபூ கோக் காம் என்பவருக்கு பல எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டன.
2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய வோங் கிம் புன்னுக்கு, 52, நேற்று 16 வாரச் சிறைத் தண்டனையும் 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகாலத்திற்கு அனைத்துவிதமான வாகனங்கள் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
'ஃபிரேகிரண்ட் ஃபுளோரிஸ்ட்' உள்ளிட்ட வர்த்தகங்களை சொந்தமாக நடத்தி வந்த வோங் கடந்த பிப்ரவரியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
2019ல் மற்றொரு விபத்திலும் அவர் சிக்கியிருந்தார். அப்போது ஒஃபிர் சாலை, விக்டோரியா சாலை சந்திப்பில் அவர் காரை ஓட்டிச் சென்றபோது சைக்கிளோட்டி மீது மோதினார்.
அண்மையில் 2020 ஜூலை 9ல் நிகழ்ந்த விபத்தில் இரவு 11.00 மணியளவில் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் சாலையை நோக்கி ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றபோது கவனக்குறைவால் அவரது மசராட்டிக் கார் வயதான திரு ஃபூ மீது மோதியது.
சாலையைத் தள்ளாடி தள்ளாடி கடந்து கொண்டிருந்த திரு ஃபூ தூக்கி எறியப்பட்டார்.
விபத்துக்குப் பிறகு வோங் தனது காரை மெதுவாக நிறுத்தினாலும் பின்னர் முதியவருக்கு உதவி செய்யாமல் சென்றுவிட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திரு வோங் அடையாளம் காணப்பட்டார்.
விசாரணையில் திரு ஃபூவின் உடையில் இருந்த சில அடையாளங்கள் திரு வோங்கின் கார் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்பது உறுதியானது.
விபத்தில் திரு ஃபூவுக்கு இடுப்புப் பகுதியிலும் முதுகுத் தண்டிலும் காயம் ஏற்பட்டது. ஏறக்குறைய 43 நாள்கள் மருத்துவமனை விடுப்பு அளிக்கப்பட்ட அவர், இரண்டு மாதங்களுக்கு மேல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தினார்.

