தன்னைக் களங்கப்படுத்தும் ஃபேஸ்புக் பதிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்திய நிலையில் ஒரு சில பகுதிகளை மட்டும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான லியோங் மன் வாய் அகற்றியிருக்கிறார்.
லியோங் மன் வாயின் பதிவில் பல தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக அமைச்சர் சண்முகம் சுட்டிக் காட்டியிருந் தார்.
திரு லீ சியன் யாங்-திருமதி லீ சுவெட் ஃபெர்ன் வழக்கு விவகாரத்தில் இல்லப்பணிப்பெண் பார்ட்டி லியானியின் வழக்கை முன்னதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டு பேசியது 'நீரில் சேற்றைக் கலக்கும்' முயற்சி என்ற பகுதியை மட்டும் தமது ஃபேஸ்புக் பதிவிலிருந்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லியோங் அகற்றியிருந்தார்.
காவல்துறையின் விசாரணையில் ஒத்துழைப்பதாகக் கூறிய தம்பதி பின்னர் சிங்கப்பூரில் இருந்து காணாமல் போயிவிட்டனர் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகமும் குற்றவியல் வழக்குகளில் தங்களுடைய கருத்துகளை மக்களிடம் திணிக்க நாடாளுமன்றத்தை ஒரு தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற பத்தியையும் தம்பதி சிங்கப்பூரில் காணாமல்போனதற்காக அவர்கள் ஓடிவிட்டதாக திரு சண்முகம் கருதுகிறார் என்ற பத்தியை யும் லியோங் நீக்கியிருந்தார்.
தனது பல அறிக்கைகளை மீட்டுக்கொள்ளவும் ஃபேஸ்புக் பதிவுகளை அழிக்கவும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்காக அமைச்சர் சண்முகத்திடம் மன்னிப்புக் கேட்கவும் முன்பு மறுத்த லியோங் ஃபேஸ்புக் பதிவில் மாற்றங்களைச் செய் திருந்தார்.
திரு லியோங் வியாழக் கிழமை வெளியிட்ட மற்றொரு பதிவில் திரு, திருமதி லீ வழக்கு பற்றி சட்ட அமைச்சர் பதிலளித்த பிறகு தனது மனதில் தோன்றிய கேள்விகளை கேட்க விரும்பியதாகத் தெரிவித்திருந்தார்.
அமைச்சருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதோ, நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்வதோ தமது நோக்கமல்ல என்று வலியுறுத்திய லியோங், பொது நலனைக் கருத்தில்கொண்டே கேள்விகளை எழுப்பியதாகக் கூறினார்.
"புதன்கிழமை நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பிறகு திங்கள் கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்துகளை மீட்டுக்கொள்ள முடிவு செய்தேன். இது, இதன் தொடர்பான அக்கறைகளைப் போக்கும்," என்று அவர் தெரி வித்தார்.
அமைச்சர் கேட்டுக்கொண்டதைப்போல தனது ஃபேஸ்புக் பதிவை முழுமையாக அகற்றுவது ஏற்புடையது அல்ல என்று லியோங் கூறினார்.

