சிங்கப்பூரில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 2022ல் காசநோய் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது. 2022ல் சிங்கப்பூர் வாசிகளிடையே 1,251 புதிய காசநோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இது, 2021ல் பதிவான 1,300 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.
இருந்தாலும் காசநோய் பொதுச் சுகாதாரத்துக்கு மிரட்டலாக விளங்குகிறது என்று நேற்று அறிக்கை வாயிலாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மொத்த காசநோய் சம்பவங்களில் முக்கால்வாசி பேர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.
2022ல் காசநோயால் 405 பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
காசநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 846. அதாவது பெண்களைவிட இரண்டு மடங்கு ஆண்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் காசநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அமைச்சு தெரிவிக்கவில்லை.
2022ல் ஜாலான் புக்கிட் மேராவில் ஏறக்குறைய 170 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டனர்.
இருமல், சளி, மார்பு வலி, இரவில் வியர்த்தல் போன்ற பொதுவான அறிகுறிகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.
"நமது மக்கள்தொகையில் காசநோய் தொற்று பொதுவானது அல்ல. காசநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 30 விழுக்காட்டினர் முதியவர்கள்," என்று அமைச்சு குறிப்பிட்டது.