செந்தோசா கம்பி வட வண்டியில் புகைப்பிடித்த ஆடவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் இருந்து மின்சிகரெட்டுகளும் அவற்றைப் பயன்படுத்த உதவும் கருவிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது. 24 வயதான அவ்விரு ஆடவரும் விசாரணையில் உதவி வருவதாக ஆணையம் கூறியது.
'டிக்டாக்கில்' வெளியான காணொளி குறித்து சென்ற ஞாயிற்றுக்கிழமை தகவல் அறிந்ததாக ஆணையம் சொல்லிற்று.
பத்து நிமிடம் நீடிக்கும் அந்தக் காணொளியில் இரு ஆடவர்கள் புகைப்பிடிப்பதும் மின்சிகரெட் பயன்படுத்துவதும் பதிவாகியுள்ளது.
அவர்கள் இம்பியா லுக் அவுட் நிலையத்திற்கும் மெர்லயன் நிலையத்திற்கும் இடையே இவ்வாறு புகைப்பிடித்தனர். ஏறக்குறைய 25,000 முறை அந்தக் காணொளி பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளர் ஒருவர் சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தக் காணொளியை அனைவரும் காணமுடியாதவாறு பார்வையாளர் அமைப்பை மாற்றிவிட்டார்.
தடைசெய்யப்பட்ட மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்பான கருவிகளையும் வைத்திருத்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தீவிரமாகக் கருதுவதாக ஆணையம் குறிப்பிட்டது.
ஆடவர்கள் இருவரும் சட்டத்தை மீறி மின்சிகரெட் பயன்படுத்தியதுடன் அதைக் காணொளியாக 'டிக்டாக்' தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இணையம் வழியாகவோ வெளிநாடுகளில் இருந்தோ மின்சிகரெட்டுகளை வாங்குவதோ அவற்றை வைத்திருப்பதோ பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றம். இதனை மீறுவோருக்கு $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்படக்கூடும்.
இவற்றை இறக்குமதி செய்வோர், விற்பனை செய்வோருக்கு முதல்முறை $10,000 வரையிலான அபராதத்துடன் ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் தண்டனை இருமடங்காக அதிகரிக்கப்படும்.