துவாஸ் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த துணைக் காவல்படை அதிகாரிமேல் கார் மோதியதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதன் தொடர்பில் காரை ஓட்டிய 42 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, அபாயகரமான விதத்தில் கார் ஓட்டியது ஆகியவை தொடர்பில் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்த கார் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது என்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
ஓட்டுநர் காரை மிக வேகமாகச் செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவரது வாகனம் ஓட்டும் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்த 28 வயது செர்ட்டிஸ் துணைக் காவல்படை அதிகாரி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது.

