பொங்கோல் ஈஸ்ட் இலகு ரயில் பாதையில் உள்ள கோவ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 33 வயதுப் பெண் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.
இதனையடுத்து பொங்கோல் ஈஸ்ட், பொங்கோல் வெஸ்ட் என இரண்டு இலகு ரயில் பாதைகளிலும் சேவை தடைபட்டிருப்பதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இரவு 10.30 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டது.
முன்னதாக, இலகு ரயில் பாதைக்கருகே அசைவற்ற நிலையில் காணப்பட்ட அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் இறப்பிற்குத் தீய செயல் ஏதும் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படவில்லை எனக் காவல்துறை கூறியது.
இலகு ரயில் சேவை தடைபட்ட நேரத்தில் இலவசப் பேருந்துச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங், பயணிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும்படி ஃபேஸ்புக் பதிவில் கேட்டுக்கொண்டார்.
சம்பவம் தொடர்பான படங்களில், கோவ் இலகு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தடுப்பு அமைத்திருப்பதையும் அவசர மருத்துவ வாகனம், தீயணைப்பு வாகனம் ஆகியவை அங்கு இருப்பதையும் காண முடிகிறது.
நேற்றுக் காலை இரு பாதைகளிலும் இலகு ரயில் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

