சிறார் ஆபாசக் காணொளி வைத்திருந்த ஆடவருக்குச் சிறை
முகமது கைரி அரிஃபின் எனும் 30 வயது ஆடவருக்கு நேற்று ஆறு மாதங்கள் ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரது டுவிட்டர் கணக்கில் ஆபாசப் படங்கள் இருந்ததாகவும் 816 ஆபாசக் காணொளிகளை அவர் விற்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்செயலாக இதுகுறித்துத் தெரியவந்த கைரியின் மேலாளர் காவல்துறையிடம் புகாரளித்தார். கைரியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், 203 சிறார் ஆபாசக் காணொளிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். தற்போது பிணையில் வெளிவந்துள்ள கைரி, மே மாதம் 2ஆம் தேதி தனது தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூரோங் வெஸ்ட் சாலை விபத்தில் மாண்டவர் குறித்து மனைவி நெகிழ்ச்சி
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் சென்ற செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் 47 வயது கியோ சான் லியாங் உயிரிழந்தார். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று அவரை மோதியது. அரைக் கண் பார்வை மட்டுமே இருந்தபோதும் தனது கணவர் கடுமையான உழைப்பாளி என்றும் அவரது தாய்க்கு மிக நல்ல மகனாக விளங்கியவர் என்றும் கியோவின் மனைவி கெல்லி வோங் கூறினார். திரு கியோ கிளமெண்டியில் உள்ள உடற்பிடிப்புக் கூடத்தில் பணிபுரிந்தார். வேலைக்குப் புறப்பட்ட அவர் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல சாலையைக் கடக்க முற்பட்டபோது கார் மோதி மாண்டார். பழக்கமான சாலை என்பதால் கியோ பார்வைக் குறைபாடு உள்ளோர் பயன்படுத்தும் கோலை எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்பட்டது. தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மனைவி, 12 வயது மகள், 78 வயதுத் தாயார் ஆகியோரை அவர் விட்டுச் சென்றுள்ளார். கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

