கண்புரை, கண் அழுத்த நோய் போன்ற பொதுவான கண் நோய்களுக்கான முதல் பரிசோதனை நிலையங்களாகச் செயல்படும் வகையில் மேலும் பல பலதுறை மருந்தகங்களில் கண் பராமரிப்புக் கூடங்கள் அமைக்கப்படும்.
அவை பேரங்காடிகளில் செயல்படும் சுயபரிசோதனைக் கூடங்களைப்போல் செயல்படும்.
ஒருவரின் கண்பார்வை தொடர்பான தகவல்களைத் திரட்டி அவற்றை வேறு இடத்தில் இருக்கும் கண் மருத்துவருக்கு அந்தக் கூடங்கள் அனுப்பிவைக்கும். அந்த மருத்துவர் என்ன நோய் என்பதைக் கண்டுபிடிப்பார். இதனால் நேரமும் செலவும் மிச்சமாகும்.
கண் பராமரிப்புக் கூடம், பைனியர் பலதுறை மருந்தகத்தில் முன்னோடித் திட்டமாக இடம்பெறுகிறது. இருந்தாலும் அந்தக் கூடங்கள் இந்த ஆண்டு முடிவில் மேலும் இரண்டு அல்லது மூன்று பலதுறை மருந்தகங்களில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தில் புத்தாக்க, துல்லிய கண் நல நிலையம் ஒன்று புதிதாக நேற்று தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் கண் பராமரிப்புக் கூடங்களும் ஒன்று.
சிங்கப்பூரில் கண் நோய்களைக் கண்டுபிடித்து அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் நடைமுறை மக்களுக்கு எட்டக்கூடியதாக, கட்டுப்படியாகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அந்தச் செயல்திட்டங்களின் இலக்காகும்.
சிங்கப்பூரில் 60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 180,000 பேருக்கு ஏதோ ஒரு வகை பார்வைக் கோளாறு இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செங் சிங்-யு தெரிவித்தார்.
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைகிறது. இதன் காரணமாக பார்வைக் கோளாறு உள்ளவர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு மடங்காகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களுக்கு கண் நோய் இருக்கிறது என்பது பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் அவர்கள் கண் பரிசோதனையைத் தவிர்த்து வருகிறார்கள் என்று பேராசிரியர் விளக்கினார்.
"சமூகத்தில் கண் பரிசோதனைகளை அறிமுகப்படுத்தி அவற்றை மேம்படுத்துவது நமது இலக்கு. கண் கோளாறுகளை குறித்த காலத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கி அதன்மூலம் கண் பார்வை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே நம் விருப்பம்," என்று அவர் கூறினார்.

