2022ல் தாங்களாகவே கைவிட்டவர்கள் 8,731 பேர்
சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணைய சூதாட்டத்தளத்தில் இருந்து தாங்களாகவே விலகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2022ல் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகக் கூடியது.
காற்பந்து போன்ற விளையாட்டுகளின் மீது பந்தயம் கட்டுவதை நிறுத்திவிடும் முயற்சியாக அவர்கள் அந்தச் சுயமுடிவை எடுத்தனர்.
சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் இருந்து சென்ற ஆண்டில் சுயமாக விலகிக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,731 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை, 2021ல் 4,802 ஆகவும் 2020ல் 4,011 ஆகவும் 2019ல் 3,720 ஆகவும் இருந்தது. சூதாட்டப் பிரச்சினைக்கு எதிரான தேசிய மன்றம் இந்த மாதம் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
மனநலக் கழகத்திலும் இந்த மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளிலும் சூதாட்டம் தொடர்பில் ஆலோசனை நாடிய மக்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அடிப்படையில் கொஞ்சம் அதிகரித்துள்ளது.
சூதாட்டப் பித்தில் இருந்து மீண்டு வருவதற்கான ஆதரவை வழங்கும் இதர சமூக அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிவிவரங்கள் இதில் சேரவில்லை.
சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தில் ஒரு கணக்கைத் திறக்க அல்லது ஒரு கணக்கை நிலைநாட்டி வரும் வழக்கத்தைத் தங்களுக்குத் தாங்களே முடித்துக்கொள்ள சுய விலகல் நடைமுறை அனுமதிக்கிறது.
அந்த இணையத்தளத்தில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் 12 மாத காலத்திற்கு சூதாட்ட காரியங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
சூதாட்டப் பிரச்சினைக்கு எதிரான தேசிய மன்றப் பேச்சாளர் இது பற்றி விளக்கினார்.
"இந்த மன்றம் 2022ல் தனது இணையத்தளங்கள் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்தியது.
"சமூகப் பாதுகாப்பையும் அது எடுத்துக் கூறியது. தன்னுடைய இணையத்தளங்கள் இணையச் சேவை நுழைவாயில்கள் ஆகியவற்றையும் மன்றம் மேம்படுத்தியது.
"இவை காரணமாக மக்களில் மேலும் பலர் சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றி எளிதில் தெரிந்துகொண்டார்கள்.
"சுயமாக தாங்களே விலகிக் கொள்ள முடிவு செய்து விண்ணப்பித்தார்கள்," என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார்.
சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. அதனால் முன்னிலும் அதிகமான மக்கள் சூதாட்ட வழிகளை நாடினர்.
இவற்றின் காரணமாக இந்த மன்றத்தின் நேரடித் தொலைபேசி எண் வழியாக அல்லது இணைய உரையாடல் மூலமாக தொடர்புகொண்டவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 2021ல் 9,806 ஆக இருந்தது. அது சென்ற ஆண்டில் 10,388 ஆகக் கூடியது.
இருந்தாலும்கூட கொவிட்-19க்கு முன்பு 2019ல் இந்த எண்ணிக்கை 14,907 ஆக இருந்தது.
இதனிடையே, அதிகம் பேர் விலகிக்கொண்டு இருப்பது பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், இது ஓர் ஆக்க கரமான மேம்பாடு என்றது.

