நிறுவனங்கள் அவற்றின் கரிம வரியைச் செலுத்தும்போது கரிமப் புள்ளிகளைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கான கூடுதல் வாய்ப்புகள் விரைவில் கிடைக்கக்கூடும்.
இம்மாதம் 2ஆம் தேதி அனைத்துலக அங்கீகாரம் பெற்ற கரிமப் புள்ளிகள் வழங்கும் இரு பதிவகங்களோடு தேசிய சுற்றுப்புற வாரியம் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டது.
தற்போது மேலும் மூன்று பதிவகங்களோடு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பதிவகங்கள், வன அழிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அணுக்கமாகக் கண்காணிக்கும். தவிர்க்கப்படும் அல்லது அகற்றப்படும் ஒவ்வொரு கரியமில வாயு அலகிற்கும் கரிமப் புள்ளிகளை வழங்கும்.
ஐந்து பதிவகங்களும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் நடவடிக்கைகளுக்கே கரிமப் புள்ளிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும்.
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் நிறுவனங்கள் கரிம வரி செலுத்தவேண்டும்.
இவற்றில் ஐந்து விழுக்காடு வரையில், அனைத்துகக் கரிமப் புள்ளிகளைப் பயன்படுத்திச் செலுத்தலாம் என்று சென்ற ஆண்டு பிப்ரவரியில் அரசாங்கம் அறிவித்தது.
ஓர் ஆண்டில் 25,000 டன்கள் அல்லது அதற்குமேல், சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளியேற்றும் நிறுவனங்கள் இவ்வரியைச் செலுத்துவது கட்டாயம்.
இருப்பினும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 6வது பகுதியின்கீழ் இவ்வாண்டு வரையறுக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டால் மட்டுமே சிங்கப்பூரில் வரியைச் செலுத்துவதற்கு கரிமப் புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

