$109 மி. மோசடி பற்றிய விசாரணை
காவல்துறை ஏறக்குறைய $10.9 மில்லியன் மோசடி தொடர்பில் 400க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது. விசாரிக்கப்படுவோரில் 275 பேர் ஆண்கள்; 134 பேர் பெண்கள். அவர்கள் 16 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இம்மாதம் 10ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையில் அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது. முதலீடு, மின்வர்த்தகம், வேலைவாய்ப்பு, இணையக்காதல் போன்ற மோசடிகள் குறித்து மொத்தம் 1,050க்கு மேற்பட்ட வழக்குகள் தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
'ஜேட்' கற்கள் மோசடி குறித்துக் காவல்துறை எச்சரிக்கை
'டிக்டாக்' தளத்தில் நேரலையில் 'ஜேட்' கற்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றும் மோசடி குறித்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 10 பேர் இத்தகைய மோசடியில் மொத்தம் 95,000 வெள்ளியை இழந்தனர். நேரலையில் விற்கப்படும் 'ஜேட்' கற்களுக்கு மோசடிக்காரர்கள் தரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பிறகு அவர்கள் பணம் வந்துசேரவில்லை என்று கூறுவர். அல்லது பணம் செலுத்திய பிறகு அவர்களைத் தொடர்புகொள்ள இயலாது. வெட்டப்படாத 'ஜேட்' கற்களில் முதலீடு செய்யும்படி சிலரிடம் பணம் வசூலித்த பின்னர் அவற்றை வெட்டும்போது தரத்துக்கு ஏற்ப கற்களைத் தாங்களே வாங்கிக்கொள்வதாகவும் கூறி மோசடிக்காரர்கள் ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.

