ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை வழங்குவது மிக முக்கியம். அவர்களுடைய தேவை எதுவாக இருந்தாலும் குறிப்பாக வளர்ச்சிக்கான தேவையுள்ள குழந்தை களுக்கு சிறந்த தொடக்கம் இருக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று வலியுறுத்தினார்.
ஸ்பார்க்கிள்டோட்ஸ்@ஃபெர்ன்வேல் பாலர் பள்ளிக்கு வருகையளித்த அவர், அனைவரையும் உள்ளடக்கும் ஆதரவுத் திட்டத்தின் அமலாக்கத்தை நேரில் கண்டறிந்தார்.
பாலர் கல்வியில் ஆரம்பத்திலேயே தலையிட்டு குழந்தை களின் கற்றலைப் பூர்த்தி செய்யும் இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை அவர் வரவேற்றார்.
முன்னோடித் திட்ட மதிப்பீட்டுக் காலத்துக்குப் பிறகு இதர பாலர் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"குழந்தைகள்மீது கவனத்தை செலுத்தி அவர்களுடைய தேவைக்கு ஏற்ப பாடத் திட்டங்களை உருவாக்குவது இந்த திட்டத்தில் எனக்குப் பிடித்த அம்சம்," என்று அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.
'InSP' எனும் இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டில் குழந்தை களின் வளர்ச்சிக்கு ஆதரவாகத் தொடங்கப்பட்டது.
இயற்கையோடு ஒருங் கிணைந்த இது, பொதுவான வளர்ச்சியுள்ள குழந்தைகளுடன் வளர்ச்சி தேவையுள்ள குழந்தைகள், சேர்ந்து கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.
இது, மற்றவர்களுடன் நம்பிக்கையோடு உரையாடவும் மதிப்பான சமூகத் திறன்களை கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கிறது.
முன்னோடித் திட்டம் அமலாக்கப்படும் ஏழு பள்ளிகளில் பிசிஎஃப் ஸ்பார்க்கிள்டோட்ஸ்@பெர்ன்வேல் பள்ளியும் ஒன்று. பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புடன் முழுமையாக ஆலோசித்த பிறகு இந்த ஏழு பள்ளிகளும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
உடற்பயிற்சிக் கூடம், பொருட் களைப் பார்த்து, தொட்டு உணர்ந்துகொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சாதனங்கள் உள்ள உணர்வு அறை போன்றவை நிலையத்தில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்களாகும்.
மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தில் அனைவரையும் உள்ளடக்கும் கல்விக் குழுவின் துணை இயக்குநரான டாக்டர் ஹனி இங், இந்த நடவடிக்கைகள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய குழந்தைகளை சாந்தப் படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். அதிபர் ஹலிமா, வளர்ச்சித் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு 'InSP' திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றார்.