பொருளியல் வளர்ச்சிக் கழக தலைவரான பே சுவான் ஜின், வர்த்தக, தொழில் அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுக்கு நிரந்தரச் செயலாளர் ஆகிறார். வரும் மே 1ஆம் தேதி அவர் புதிய பொறுப்பை ஏற்கிறார்.
தற்போதைய வர்த்தக, தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளரான கேப்ரியல் லிம், இதே அமைச்சின் கொள்கை பிரிவின் நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' தலைமை நிர்வாகியாக உள்ள பிங் சியோங் பூன் தனது பதவியிலிருந்து விலகி டாக்டர் பேவுக்குப் பதிலாக பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகிறார்.
திரு பிங்கின் எண்டர் பிரைஸ் சிங்கப்பூர் தலைமை நிர்வாகி பொறுப்பை தற்போதைய வர்த்தக, தொழில் அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவின் நிரந்தரச் செயலாளர் லீ சுவான் டெக் ஏற்கவிருக் கிறார்.
இந்த மாற்றங்களை நேற்று அறிவித்த பொதுச் சேவை பிரிவு அனைத்து நியமனங்களும் மே 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்தது.
டாக்டர் பே, பயிற்சி பெற்ற மருத்துவர் ஆவார். கடந்த 1992ஆம் ஆண்டில் அவர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் சேர்ந்தார்.
கழகத்தின் வடஅமெரிக்க நடவடிக்கைகளையும் உயிர் மருத்துவ அறிவியல் பிரிவையும் அவர் பார்த்துக்கொண்டார்.
முன்னதாக வர்த்தக, தொழில் அமைச்சிலும் பணி யாற்றிய அவர், ஏஸ்டார் அமைப்பில் உயிர்மருத்துவ ஆய்வு மன்றத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார்.
திரு லிம், தற்காப்பு அமைச்சு, பொதுச்சேவை பிரிவு, சுகாதார அமைச்சு உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2011ஆம் ஆண்டில் அவர், பிரதமரின் முதன்மை தனிச் செயலாளராக நியமிக்கப் பட்டார்.

