உள்ளூர் காய்கறிகள், மீன்கள், முட்டைகளைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு வர்த்தகங்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 'ஃபார்ம் டு டேபிள்' அங்கீகாரத் திட்டத்தின்கீ்ழ் 11 ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு வர்த்தகங்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்டன.
உள்ளூர் காய்கறிகள், மீன்கள், முட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த கூடுதல் ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு வர்த்தகங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் இலக்குடன் இத்திட்டத்தை சிங்கப்பூர் உணவு முகவையும் உள்ளூர் சங்கங்களும் அறிமுகப்படுத்தியுள்ளன.
'ஃபார்ம் டு டேபிள்' அங்கீகாரத் திட்டச் சின்னத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்களில் ஃபுட்டாக்ஸ் கேட்டரர் அண்ட் மேனுஃபேக்சரர், கிச்சன் ஹாவ்ஸ் குழுமம், ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா ஆகியவை அடங்கும்.
இந்த அங்கீகாரத்தைப் பெற விரும்பும் வர்த்தகங்கள் https://go.gov.sg/ftt எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
ஒவ்வொரு அங்கீகார விருதும் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக்கூடியதாக இருக்கும். நீடித்து நிலைத்திருக்க உள்ளூர் வாடிக்கையாளர்கள், உணவு வர்த்தகங்களின் ஆதரவு தேவைப்படுவதாக உள்ளூர் காய்கறிப் பண்ணைகளும் மீன் பண்ணைகளும் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உட்கொள்ளப்பட்ட காய்கறிகளில் 4.3 விழுக்காடு சிங்கப்பூரில் பயிரிடப்பட்டவை.
ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் நேற்று நடைபெற்ற அங்கீகார விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன்.
"உள்ளூர் தயாரிப்புகளை அதிகரிக்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதே சமயத்தில் வாடிக்கையாளர்களும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
"காய்கறிகள், மீன்கள், முட்டைகளை அப்படியே பல மாதங்களுக்கு வைத்திருக்க முடியாது," என்று டாக்டர் கோ கூறினார்.

