ஹாலந்து டிரைவில் உள்ள ஒரு வீட்டில் 80 வயது மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அவர் வசித்து வந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பக்கத்து வீட்டில் வசிப்பவர் காவல்துறையினரை அழைத்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.55 மணி அளவில் இதுகுறித்து தகவல் கிடைத்ததாக காவல்
துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, புளோக் 11 ஹாலந்து டிரைவில் உள்ள அந்த வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். பிற்பகல் 3 மணி அளவில் வீட்டின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்த அதிகாரிகள், அந்த மூதாட்டி மாண்டு கிடந்ததை உறுதி செய்தனர்.
அந்த மூதாட்டியைக் கடந்த ஒரு வாரமாகப் பார்க்கவில்லை என்றும் அவர் வேறிடம் சென்று விட்டார் என்று நினைத்ததாவும் அதே கட்டடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார். மூதாட்டியின் வீட்டில் கடந்த ஒரு வாரமாக விளக்கு எரியவில்லை என்று அவர் கூறினார்.
மாண்ட மூதாட்டி ஒய்வு பெற்ற ஆசிரியர் என்றும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தமது அண்டைவீட்டாருடன் அவர் நட்புறவுடன் பழகியதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.
மூதாட்டியின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

