வேலையில்லாத 37 வயது மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஆடவருக்கு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்பெண்ணின் 53 வயது கணவர் ஒரு வழக்கறிஞர். இருவரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தனர். அப்பெண் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவருக்கு ஏற்கெனவே ஒரு மகள் இருக்கிறார்.
சிங்கப்பூரில் தாமும் தமது மகளும் தங்கி கல்வி பயில வேண்டும் என விருப்பப்பட்ட அப்பெண் இதுதொடர்பாக குடிநுழைவு ஆலோசனை பெற அந்த வழக்கறிஞரை அணுகினார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டபோது சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, மணமுறிவு ஏற்பட்டால் அப்பெண்ணுக்கு அந்த வழக்கறிஞர் தொடர்ந்து மாதந்தோறும் $2,000 வழங்க வேண்டும். அத்துடன், அப்பெண்ணின் மகளுக்குத் தேவையான பணத்தை அவர் தர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாது, மண
முறிவு ஏற்பட்டால் திருமணம் செய்த பிறகு கணவர் வாங்கும் அனைத்துச் சொத்துகளும் தங்களுக்கு இடையே சரிபாதியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று தம்பதியர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
ஆனால் திருமணத்துக்கு முன்பும் பின்பும் அப்பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் எந்தச் சூழ்நிலையிலும் பிரிக்கப்படாது என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அப்பெண்ணுக்கு அந்த வழக்கறிஞர் $100,000 தர வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பிறகு, தமது மகளுடன் தங்ளின் வட்டாரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் அப்பெண் வசித்து வந்தார். அந்த ஆடவர் புக்கிட் தீமாவில் தமது தாயாருடன் வசித்தார். அவ்வப்போது தமது மனைவியை அவர் வந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அப்பெண்ணுக்குப் பணம் கொடுப்பதை அந்த வழக்கறிஞர் நிறுத்தினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யப் பெண்களுக்குப் பணம் கொடுத்து காணொளி அழைப்புகள் மூலம் தமது கணவர் பாலியல் சேவை பெற்றுக்கொண்டதைக் கண்டுபிடித்ததாக அப்பெண் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாடகைத் தொகை $3,500 உட்பட மாதந்தோறும் $8,500 கேட்டு தமது கணவருக்கு எதிராக அந்த ரஷ்யப் பெண் வழக்கு தொடுத்தார். அந்த ஆடவர் தமது மனைவிக்கு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாதந்தோறும் $2,592 வழங்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி கேத்ரின் தோங் உத்தரவிட்டார். மனைவிக்கு வாடகை வீடு கிடைத்ததும் வாடகையைச் செலுத்துவதற்காக மாதந்தோறும் கூடுதலாக $3,500 வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மனைவிக்கு வாடகை வீடு கிடைத்ததும் அந்த ஆடவர் மாதந்தோறும் மொத்தம் $6,092 செலுத்த வேண்டும்.
மனைவியின் மருத்துவச் செலவையும் அந்த ஆடவர் ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

