செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
323784c9-37a3-4ea4-995b-3dd1707d3210
-

தண்ணீரில் இயங்கும் துணைக்கோள இயந்திரம்

சிங்கப்பூரைச் சேர்ந்த 'அலினா' என்ற ஆகாய தொழில்நுட்ப நிறுவனமும் பிரிட்டனைச் சேர்ந்த 'யுஆர்ஏ திரஸ்ட்டர்ஸ்' என்ற நிறுவனமும் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்களும் சேர்ந்து 'அக்வா எச்இடி' (AquaHET) என்ற புதிய துணைக்கோள் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த இந்திரம், தண்ணீரில் இயங்கக்கூடியது.

விலை அதிகமான அரிய வகை வாயுக்களால் இயங்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக தண்ணீரில் இயங்கும் புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இதனால் செலவு மிகவும் குறையும். சுற்றுப்புறத்திற்கும் நன்மை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புதிய இயந்திரம் 200 கிலோ எடையுள்ள துணைக் கோளங்களை இயக்கும் ஆற்றல் வாய்ந்தது. வர்த்தக ரீதியில் அதைச் சந்தைப்படுத்தவும் ஓரிரு ஆண்டுகளில் துணைக்கோளத்தில் அதைப் பரிசோதித்துப் பார்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆவ்டி கார் நிறுவன சேவை நிலைய சம்பவத்திற்கான காரணம்

உபியில் செயல்படும் ஆவ்டி கார் நிறுவனச் சேவை நிலையத்தில் இம்மாதம் 7ஆம் தேதி வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஒருவர் காயம் அடைந்தார். 100 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். நிலையத்தின் ஒரு பக்கச் சுவர் இடிந்தது. வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சத்தம் பக்கத்தில் இருக்கும் கட்டடங்களில் வேலை பார்த்த பலருக்கும் கேட்டது. அவர்களில் சிலர் பயந்துபோய் வெளியேறிவிட்டனர்.

மின்தூக்கி இயந்திர அறையில் வைக்கப்பட்டு இருந்த கழிவு எண்ணெய்த் தொட்டியில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வாயு சேர்ந்து இருந்ததே அந்தச் சம்பவத்திற்கான காரணம் என்பது முதல் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

வேலையிட பாதுகாப்பு சுகாதார மன்றம் நேற்று இதனைத் தெரிவித்தது. துவாஸ் சவுத்தில் செயல்படும் வேதிப்பொருள் கலப்பு, சேமிப்புக் கிடங்கில் மார்ச் 13ஆம் தேதி பெரிய அளவில் தீ மூண்டது.

இது பற்றி தனியாக தகவல் தெரிவித்த இந்த ஆணையம், தீப்பிடிக்கக்கூடிய வேதிக் கரைப்பான் இருந்த ஒரு சாதனத்தில் தீ கிளம்பியதாக முதல் கட்ட விசாரணை மூலம் தெரிந்தது என்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் சிறிய அளவில் காயம் அடைந்தனர். 40 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

வேலை இடங்களில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களை இன்னும் சிறந்த முறையில் கையாளவேண்டிய தேவை இருக்கிறது என்பதையே அந்தச் சம்பவங்கள் நினைவூட்டுவதாக மன்றம் தெரிவித்தது.

புற்றுநோய் சிகிச்சை: காப்புறுதி பாதுகாப்பை கூட்டிய நிறுவனங்கள்

ஐபி எனப்படும் ஒருங்கிணைந்த பெரிய காப்புறுதிப் பாதுகாப்புத் திட்ட நிறுவனங்களில் சில நிறுவனங்கள், தங்கள் பாலிசி திட்டங்கள் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் காப்புறுதிப் பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.

ஐபி நிறுவனங்களுக்கு சனிக்கிழமை முதல் சில வரம்புகள் நடப்புக்கு வருகின்றன. அதை ஈடுசெய்யும் வகையில் அந்த நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் பி1 அல்லது ஏ வார்டில் அல்லது தனியார் பராமரிப்பு நிலையத்தில் புற்றுநோய் சிகிச்சை பெற காப்புறுதி பாதுகாப்பு வழங்கும் ஐபிக்களுக்கான தேசிய சுகாதாரக் காப்புறுதி ஏற்பாடான மெடிஷீல்டு லைஃப் பாதுகாப்பைப் போல் ஐந்து மடங்கு வரம்பு ஏற்பாட்டை வழங்கப்போவதாக இதுவரை ஏழு நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் கோடிகாட்டியுள்ளன.