சொத்து முகவை நிறுவனத்தின் இணை உரிமையாளரான ஒருவர் சுமார் பத்து ஆண்டுகளாக 5,381 சதுர அடி பரப்பளவுள்ள கூடுதல் இடத்தை சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அனுமதியின்றி கட்டி பயன்படுத்தி வந்தார்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட அந்த இணை மாடி, அலெக்சாண்டிரா ரோட்டில் உள்ள 'தி அலெக்சியர்' கட்டடத்தின் எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்தில் சம அளவிலான நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. அது அலுவலகப் பணிகளுக்காகவும் கோப்புகளை சேமித்துவைக்கும் இடமாகவும் தகவல்தொழில்நுட்பச் சாதனங்கள், பழுதுபார்ப்புக் கருவிகள் வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.
இந்தக் குற்றத்துக்காக இயோவுக்கு நேற்று $50,000 அபராதம் விதிக்கப்பட்டது. கட்டடத்தின் எட்டாவது மாடியில் அனுமதியின்றி இணை மாடி ஒன்றை அமைத்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
தீப் பாதுகாப்புப் பணி தொடர்பான சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையாளரின் அனுமதியின்றியும் அவர் அந்த இணை மாடியை அமைத்தார். தண்டனை விதிப்பின்போது மேலும் இரு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
கட்டட கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, முறையான அனுமதியின்றி கட்டட வேலையில் ஈடுபடும் ஒருவருக்கு $200,000 வரையிலான அபராதம், இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட அந்த இணை மாடி தொடர்பான விவகாரம், யாரோ ஒருவரால் அளிக்கப்பட்ட ரகசிய தகவலுக்குப் பிறகு அம்பலமானது.
சம்பந்தப்பட்ட அமைப்புகள் 2019 பிப்ரவரி மாதத்தில் அந்தக் கட்டடத்தைச் சோதனையிட்டன.
திரு இயோவும் அவரது மனைவியான கெய்ன் சிம்மும் 'தி அலெக்சியர்' கட்டடத்தின் எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்தின் உரிமையாளர்கள். அவர்கள் ZACD இன்வெஸ்மெண்ட்ஸ் எனும் சொத்து முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
'தி அலெக்சியர்' கட்டடத்தின் எட்டாவது மாடியில் உள்ள கூடுதல் இடத்தை தனது வர்த்தகத்துக்காக பயன்படுத்த 2008ஆம் ஆண்டு முற்பகுதியில் திரு இயோ எண்ணியிருந்தார். ஆனால், அந்த இணை மாடியை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்று உறுதிப்படுத்த இருவரும் தவறிவிட்டனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
கட்டட, கட்டுமான ஆணையத்தின் உத்தரவின்படி அனுமதியின்றி கட்டப்பட்ட அந்த இணை மாடி 2019 ஏப்ரல் மாதம் இடிக்கப்பட்டது.

