'அல்கலைன்' நீர் வடிகட்டுதல் சாதனம் தொடர்பில் அதன் வாடிக்கையாளர்களிடம் பொய்யான வாக்குறுதிகளையும் அதன் பழுதுபார்ப்பு சேவை தொகுப்புகள் தொடர்பில் பொய்யான தகவல்களையும் அளித்த அச்சாதனத்தின் விநியோக நிறுவனமான ட்ரிப்பல் லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங்குக்கு அரசு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்பிலான விசாரணையைச் சந்திக்க நீதிமன்றத்துக்கு வரத் தவறிய அந்நிறுவனத்தின் ஒரே இயக்குநரும் பங்குதாரருமான டான் ஜியா ஹுவாங் தனது நிறுவனத்தின் சாதனங்களை வாங்க வாடிக்கையாளர்களைத் தூண்டுதல், வாங்க உதவி செய்தல், தனது நிறுவனத்தை அவ்வாறு செய்ய அனுமதித்தல் அல்லது கொள்முதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின்படி (நியாயமான வர்த்தகம் புரிதல்) அந்த சில்லறை விற்பனை நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்று நீதிமன்றம் உறுதி செய்தது என்று வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஆணையம் அந்நிறுவனத்துக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பரில் நீதிமன்ற ஆணைக்கு விண்ணப்பம் செய்திருந்தது.
2018 ஜனவரி மாதத்துக்கும் 2022 அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்நிறுவனத்துக்கு எதிராக 469 புகார்கள் கிடைக்கப்பெற்றன என்று கூறிய சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம், அதன் விவகாரத்தை வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்திடம் கொண்டு சென்றது. ஆணையம் பின்னர் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைப் பேட்டி கண்டு அவர்களின் புகார்களைக் கேட்டறிந்தது.
'அல்கலைன்' நீர் வடிகட்டுதல் சாதனத்திலிருந்து வரும் தண்ணீரைக் குடிப்பதால், எலும்புப்புரை, நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகம் அல்லது பெருங்குடல் கோளாறுகள், தடிப்புத் தோல் அழற்சி போன்ற பல்வேறு உடல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் அல்லது அப்பிரச்சினைகள் உள்ளோரின் சுகாதாரத்தை மேம்படுத்தலாம் என்று வாடிக்கையாளர்களைத் திசை திருப்பும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டது என்று விவரிக்கப்பட்டது.
மேலும் தனது 'அல்கலைன்' நீர் வடிகட்டுதல் சாதனம் தாம்சன் மருத்துவ நிலையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்ட காலத்துக்கு அச்சாதனம் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொய்யான வாக்குறுதிகளைக் கூறியது.
நீதிமன்ற உத்தரவுப்படி, ட்ரிப்பல் லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங் நிறுவனம் நீதிமன்ற உத்தரவின் விவரங்களை பொது அறிக்கையாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், லியன்ஹ சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களில் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் சொந்தச் செலவில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

