புனித யாத்திரைக்கு செலுத்தப்பட்ட $470,000ஐ களவாடிய குற்றச்சாட்டு
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குச் செல்லும் புனித உம்ரா யாத்திரைக்காக 218 யாத்திரிகர்கள் ஒரு நிறுவனத்திடம் செலுத்திய $470,000 பணத்தைக் களவாடியதாக நம்பப்படும் 55 வயது சுவாண்டி மார்சுக்கே எனும் ஆடவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன.
அவற்றில் ஒரு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு, சுற்றுலா நிறுவனத்துக்குரிய உரிமம் இல்லாதது தெரிந்தும் 'பில் ஹிக்மா கன்சல்டண்ட்ஸ்' நிறுவனத்துக்கு சுற்றுலா ஏற்பாடு மேற்கொண்டது தொடர்பிலான ஐந்து குற்றச்சாட்டுகள் ஆகியவை அடங்கும்.
ஆண்டி மார்டின் அல்லது டத்தோ ஆண்டி மார்டின் என்று அழைக்கப்படும் சுவாண்டி நொடித்துப்போனவர் என்று 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டவர். பில் ஹிக்மா நிறுவனத்தின் ஒரே நிர்வாகியாக தன்னை 2014, பிப்ரவரி 13ஆம் தேதியன்று பதிவு செய்தார் சுவாண்டி. யாத்திரிகர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை சுவாண்டி தனது வர்த்தக முதலீடு களுக்காகப் பயன்படுத்திக்கொண்டார் என்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்கிறது.
சிறுவர் பற்றிய ஆபாசக் காணொளிகளை பதிவிறக்கம் செய்தவருக்குச் சிறை
சிறுவர் ஆபாசப் படங்கள் மீதான தீராத பசி கொண்டவர் என்று அரசுத் தரப்பு வர்ணித்த ஒருவருக்கு நேற்று ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறுவர் பற்றிய 13,600 ஆபாசக் காணொளிகளை பறிவிறக்கம் செய்து வைத்திருந்தார். அவற்றில் சில குழந்தைகள் தொடர்பானவை.
அன்சாரி அப்துல் அமின் எனும் அந்த 36 வயது ஆடவர் குழந்தைகள், 11 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் பாலியல் காணொளிகள் பார்த்துள்ளார். இது தொடர்பில் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் அவர் அந்தக் காணொளிகளை 2016 முதல் 2021 வரை டெலிகிராம் இணையத்தளம் மூலம் மற்றவர்களிடம் பெற்றிருக்கிறார்.
அன்சாரி இவ்வாறு செய்கிறார் என்ற துப்பு கிடைத்தவுடன் காவல்துறையினர், 2021, அக்டோபர் 21ஆம் தேதி அவரை அவரது வேலையிடத்தில் கைது செய்தனர். அன்சாரி யாருக்காக வேலை செய்தார் என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
சீனாவின் போலி அதிகாரி மோசடி:
பெண் மீது ஏமாற்றுக் குற்றச்சாட்டு
சீனாவின் இண்டர்போல் (அனைத்துலக காவல்துறை) அதிகாரி என்று பொய் கூறி இரண்டு பேரிடம் $40,000க்கு மேற்பட்ட தொகையைக் களவாடிய பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாங் சின் எனும் அந்த 29 வயது பெண் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அனைத்துலக காவல்துறை அதிகாரி என கூறி வாங் சின், 2021 ஏப்ரல் 23ஆம் தேதி ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து $40,000 தொகையைப் பெற்றுக்கொண்ட தாக நம்பப்படுகிறது. இதே முறையைப் பயன்படுத்தி, மற்றொருவரை ஏமாற்றி, அவரிடமிருந்து ஒரு கைப்பேசி யையும் இணையவங்கி டோக்கனையும் 2021, ஏப்ரல் 28 முதல் மே 3ஆம் தேதி வரைப்பட்ட காலத்தில் பெற்றுக் கொண்டார்.
இதன் தொடர்பில், 2021, மார்ச் 29ஆம் தேதியன்று விசாரணை மேற்கொண்ட வர்த்தக விவகாரப் பிரிவின் காவல்துறை அதிகாரியிடம் பொய்யான தகவல்களைக் கூறினார் என்ற மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.
வாங்கின் விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறும். வாங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீதான ஒவ்வொரு ஏமாற்றுக் குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

