2025ஆம் ஆண்டில் இருந்து ஆகப் பெரிய சொகுசுக் கப்பல் ஒன்று சிங்கப்பூரில் சேவை வழங்கத் தொடங்கும். டிஸ்னி சொகுசுக் கப்பல் நிறுவனத்தின் ஆகப் பெரிய சொகுசுக் கப்பலாக அது விளங்கும்.
புதிய சொகுசுக் கப்பலில் டிஸ்னி கதாபாத்திரங்களான இளவரசிகள், மார்வல் திரைப்பட நாயகர்கள் ஆகியோரைச் சித்திரிக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும்.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகமும் டிஸ்னி சொகுசுக் கப்பல் நிறுவனமும் இதன் தொடர்பில் ஐந்து ஆண்டு ஒத்துழைப்புக்கான உடன்படிக்கையைச் செய்துகொண்டுள்ளன.
வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இந்தத் தகவல்களை நேற்று வெளியிட்டார்.
புதிய சொகுசுக் கப்பலில் 6,000 பயணிகளும் 2,300 கப்பல் சிப்பந்திகளும் பயணம் செய்ய இயலும் என்று கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டு காலத்தில் மில்லியன்கணக்கான பயணிகளுக்கு அது சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஸ்னி நிறுவனமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் தெரிவித்தன.
நீடித்த நிலைத்தன்மை முயற்சியின் ஓர் அங்கமாக புதிய சொகுசுக் கப்பல் மெத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தும். இது குறைவான கரியமில வாயுவை வெளியேற்றும் எரிபொருளாகக் கருதப்படுகிறது.
சொகுசுக் கப்பலின் முதல் பயணச் சேவை குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
ஜெர்மனியில் இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே டிஸ்னி நிறுவனத்தின் மூன்று சொகுசுக் கப்பல்களை உருவாக்கிய அதே கப்பற்பட்டறையில் இந்தக் கப்பலும் கட்டப்படுகிறது.
புதிய சொகுசுக் கப்பல் சிங்கப்பூரில் சேவை வழங்க டிஸ்னி நிறுவனம் முடிவெடுத்திருப்பது, இவ்வட்டாரத்தில் சொகுசுக் கப்பல் பயணங்களுக்கான தேவை அதிகம் இருப்பதைக் காட்டுவதாக அமைச்சர் ஈஸ்வரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

