அரசாங்க ஊழியர்கள் நேர்மையாகக் கருத்துரைக்க திரு வோங் வலியுறுத்து
பொதுச்சேவைப் பிரிவு ஊழியர்கள் தங்கள் கருத்துகளை நேர்மையான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார். வேலைகளைத் திறம்படச் செய்துமுடிக்க அரசாங்கத்தின் கொள்கைகளையும் இலக்குகளையும் அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கவேண்டும் என்பதை நினைவுறுத்திய அவர், அரசாங்க ஊழியர்கள் ஒருபோதும் விவாதத்துக்கு உரியவர்களாகிவிடக் கூடாது என்றார்.
அவர்கள் பாரபட்சமற்ற முறையில், நிபுணத்துவ செயல்திறனோடு தங்களின் வேலைச்சூழலைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்று திரு வோங் கூறினார். மரினா பே சேண்ட்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுச்சேவை நிர்வாகப் பிரிவு விருந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில், 17 நிர்வாக அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். 83 பேர் பதவி உயர்வு பெற்றனர்.
வாடகை அதிகம்: கேலாங் சிராய் ரமலான் சந்தைக் கடைக்காரர்கள்
கேலாங் சிராய் ரமலான் சந்தை ஈராண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு முழு அளவில் இடம்பெறுகிறது. ஆனால் கடைகளுக்கான வாடகை மிகவும் உயர்ந்திருப்பதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர். வருகையாளர் எண்ணிக்கை குறைவாகவும் போட்டித்தன்மை அதிகமாகவும் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். சில கடைகளுக்கு $24,000 வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்இணைப்பு, மேசைகள், ஊழியர் சம்பளம் என அதிகம் செலவிட வேண்டியுள்ளதாகக் கடைக்காரர்கள் கூறினர். இவ்வாண்டு ரமலான் சந்தை இம்மாதம் 17ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை செயல்படுகிறது. ஆக அதிகமாக 36 நாள்களுக்கு நடைபெறும் சந்தையில் ஏறக்குறைய 700 கடைகளை அமைப்பதற்கான இடம் இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சில வருகையாளர்கள் இந்த ஆண்டு பல உணவுப் பண்டங்களின் விலை முந்தைய ஆண்டுகளைவிடக் கூடியிருப்பதைச் சுட்டினர்.

