குவாங்ஸோவில் அமைக்கப்படும் சீனா-சிங்கப்பூர் திறன் பூங்காவின் இரண்டாம் கட்டம், திட்டமிடப்பட்டதற்கு நான்கு மாதங்கள் முன்னதாக வரும் ஜூன் மாதமே நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் அது இவ்வாண்டு அக்டோபரில் நிறைவடையும் எனக் கூறப்பட்டது.
சீனா-சிங்கப்பூர் குவாங்ஸோ அறிவுசார் நகரத்தில் அது கட்டப்படுகிறது. சீனாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், நேற்று முன்தினம் அங்கு சென்றார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் தென்சீனத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் ஆய்வுக் கழகத்திற்கு அவர் சென்றிருந்தார். செயற்கை நுண்ணறிவு, புதிய எரிசக்தி, பசுமைக் கட்டடங்கள், மாசுக் கட்டுப்பாடு போன்ற அம்சங்களில் அந்த ஆய்வுக் கழகம் கவனம் செலுத்துகிறது.
சீனச் சந்தையில் கால்பதிக்க விரும்பும் நிறுவனங்களுக்கான அனைத்துலக சோதனைத் தளம் அங்கு உள்ளது.
அங்கு செயல்படும் சில நிறுவனங்களின் ஊழியர்களைப் பிரதமர் லீ சந்தித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்ட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கிஉள்ள நிலையில், நிறுவனங்கள் மிகுந்த முனைப்புடன் இருப்பதாக குவாங்ஸோ அறிவுசார் நகரத் திட்டத்தின் துணைத் தலைமை நிர்வாகி கென்னத் டியோ கூறினார்.
அவை விரைவில் ஒப்புதலைப் பெற சீன அதிகாரிகள் ஒத்துழைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

