சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை இழக்க நேரிட்டால் தங்கள் சார்பில் முடிவெடுக்க ஒருவருக்கு அதிகாரம் வழங்கும் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்ய விரும்புவோர் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அதற்குக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இதற்கான கட்டணம் $75. ஆனால் சிங்கப்பூரர்களுக்கு இது 2026 மார்ச் வரை இலவசம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
அமைச்சர் நேற்று ஃபேஸ்புக்கில் இதுகுறித்துப் பதிவிட்டார்.
நீண்டகால அதிகாரப் பத்திரத்துக்கான பொதுக் காப்பாளர் அலுவலகம் சென்ற ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.
அதையடுத்த நான்கு மாதங்களில் இந்த பத்திரம் தொடர்பில் 26,000க்கு மேற்பட்ட இணைய விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றார் அமைச்சர் மசகோஸ்.
இப்பத்திரம் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅமைதியைத் தரும். அன்புக்குரியவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் ஒருவர், வருங்காலத்தில் தான் முடிவு எடுக்கும் ஆற்றலை இழக்க நேரிட்டால் தன் சார்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வழக்கறிஞர், கணக்காளர், சுகாதாரப் பராமரிப்பு அல்லது சமூக சேவைத் துறை ஊழியர் போன்ற தொழில்முறை வல்லுநர்களுக்கு வழங்கலாம். வல்லுநர்கள் இதற்குரிய சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம்.

