குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் உள்ள அதிகம் கல்வி பயிலாத இளம் ஊழியர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் அதிகம் சேருவதில்லை. அதிகம் கல்வி பயின்றோருடன் ஒப்பிடுகையில், அவர்கள் வேலை தேடல் முறையில் அதிக நன்மை அடையவில்லை.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய அண்மைய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
பயிற்சி மேற்கொண்டால் காலப்போக்கில் ஏறக்குறைய 20 விழுக்காடு சம்பளம் உயரும் எனக் கண்டறியபப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும் குறைந்த ஊதியம் பெறும் இளம் ஊழியர்கள் பயிற்சியில் நாட்டமில்லை என்று கூறியுள்ளனர்.
21 வயது முதல் 40 வயது வரையிலான சிங்கப்பூரர்களில் குறைந்த வருவாய் ஈட்டுவோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வேலை, குடும்பம் தொடர்பான சிக்கல்கள், மனநலன், வேலையில் சம்பள இடைவெளி உள்ளிட்ட அம்சங்கள் குறித்துப் பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 1,400 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
வெவ்வேறு கல்வித் தகுதி உடையோரிடையே பயிற்சிக்கான நிதி கிடைப்பதில் வேறுபாடு இருப்பதாக ஆய்வு குறிப்பிட்டது.

