குறைந்த அளவில் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை பிப்ரவரி மாதத்தில் ஏறுமுகமாய் இருந்தது என்றும் சில வாடகைதாரர்கள் அண்மைய மாதங்களில் அதிகரித்துவரும் வாடகை உயர்வுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தார்கள் என்றும் பகுப்பாய்வாளர்கள் கவனித்துள்ளார்கள்.
கூட்டுரிமை வீட்டு வாடகை பிப்ரவரியில் 3.5% என வேகமாக அதிகரித்தது. ஜனவரியில் அது 1.4% அதிகரிப்பாக இருந்தது என்று 99.co, எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை தளங்கள் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்தது.
வீவக வீட்டு வாடகை பிப்ர வரியில் 1.2% அதிகரித்தது. ஒப்புநோக்க ஜனவரியில் அந்த அதிகரிப்பு 0.6%ஆக இருந்தது.
கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து 26வது மாதமாகவும் வீவக வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து 32வது மாதமாகவும் உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது.
ஆனால், தொடர்ந்து இடம்பெற்று வரும் வலுவான வாடகை உயர்வுக்குப் பிறகு, வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் வாடகைதாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே அண்மைய மாதங்களில் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவருகிறது என்று சில சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.
"வாடகை உயர்வை வாடகைதாரர்கள் சகித்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். ஆனால் வீட்டு உரிமையாளர்கள் பலர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாடகை உயர்வின் பலனை அனுபவித்து வந்தாலும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் விடாப்படியாக இருக்கின்றனர்," என்று ஆரஞ்ச்டீ & டீ சொத்து முகவர் நிறுவனத்தின் ஆராய்ச்சி, பகுப்பாய்வு பிரிவின் மூத்த உதவித் தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
"அதிகமான பராமரிப்புச் செலவுகள், சொத்து வரி, அடை மானக் கட்டணங்கள் ஆகியவற்றால் வீட்டு உரிமையாளர்கள் சிரமப்படுகிறார்கள். அதேவேளையில், வாடகைதாரர்கள் கடந்த ஓர் ஆண்டில் வாடகை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பதால், கூடுதல் வாடகை தர மறுக்கின்றனர்," என்றும் திருவாட்டி சன் கூறினார்.
இந்த ஏற்றத்தாழ்வே பிப்ரவரி மாதத்தில் குறைவான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதற்குக் காரணமாகக் கூறலாம் என்றும் அவர் சுட்டினார்.
பிப்ரவரியில் கிட்டத்தட்ட 5,119 கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இது ஜனவரியுடன் ஒப்பிடும்போது 18.6% சரிவு. ஜனவரியில் 6,285 கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.
வீவக வீடுகளை எடுத்துக்கொண்டால், பிப்ரவரியில் 2,619 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இது ஜனவரியுடன் ஒப்பிடும்போது 7.2% சரிவு. ஜனவரியில் 2,822 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.
2023க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில் 100,000 தனியார் மற்றும் வீவக வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்பதால், அது தற்போதைய வாடகை சந்தையின் திசையை மாற்றிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18,000 வீடுகளைக் கொண்ட 25 கூட்டுரிமை தொகுதிகள் கட்டி முடிக்கப்பட்டு இவ்வாண்டில் குடியிருப்புக்காக விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முதலீட்டுக்காக வீடுகளை வாங்குவோர் அவற்றை வாடகைக்கு விடக்கூடும்.
ஐந்து ஆண்டுகள் தாங்கள் வாங்கிய வீட்டில் கட்டாயம் குடியிருக்க வேண்டும் என்ற காலக்கெடு சுமார் 15,000 வீடுகளுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்பதால், அந்த வீடுகளும் வாடகைக்கு விடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

