சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய இயக்கம் ஒன்றை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது.
'பாதுகாப்பாக இருங்கள், ஓட்டுநர்களின் பார்வை படும்படி இருங்கள்' என்ற வாசகங்
களைக் கொண்ட பதாகைகளுடன் 15 பேருந்துகள் நேற்று முன்தினத்திலிருந்து சாலைகளில் வலம் வரத் தொடங்கி உள்ளன.
பேருந்தில் நின்றுகொண்டிருக்கும்போது கம்பங்களையும் கைப்பிடிகளையும் பிடித்துக்கொள்ளுமாறு பேருந்துகளின் உட்புறத்தில் பாதுகாப்பு நினைவூட்டல்கள் இடம்பெறுகின்றன.
சாலைகளைக் கடப்பதற்கு முன்பு வாகனங்கள் அவ்வழியாக வருகின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு பாதசாரிகளுக்கு நினைவூட்டப்படுகிறது.
பேருந்துகளின் வெளிப்புறத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் குறிப்பிட்ட சில பகுதிகள் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் உள்ளன.
அவ்விடங்களுக்கு அருகில் வாகனங்கள் அல்லது பாதசாரிகள் இருந்தால் பேருந்து ஓட்டுநர்களால் அவர்களை அல்லது அவற்றை கண்ணாடி வழியாகப் பார்க்க முடியாது (பிளைன்ட் ஸ்பாட்) என்பதை உணர்த்த இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
புதிய இயக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகளில் ஒன்று தோ பாயோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக மையத்தில் நேற்று முன்தினம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இயக்கம் தொடர்பான கண்காட்சியை உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் நேற்று முன்தினம் திறந்துவைத்தார். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்து படம் எடுத்துக்கொள்ள பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஓட்டுநரால் பேருந்துகளில் உள்ள கண்ணாடிகள் வழி பார்க்க முடியாத இடங்களில் சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் வைக்கப்பட்டிருந்தன. பிளைன்ட் ஸ்பாட் என்றால் என்ன என்பதை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அனுபவம் பெற பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியை போக்குவரத்துக் காவல்துறை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனையுடன் இணைந்து எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நடத்தியது.

