அடுத்த வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி அனுசரிக்கப்
படுகிறது.
அதற்கு முந்திய நாளன்று பொதுப் போக்குவரத்து இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் எம்ஆர்டி நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் பின்னிரவு 12.30 மணிக்கு சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
வட்ட ரயில் பாதையில் ஹாபர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் இரவு 11.55 மணிக்கு டோபி காட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். எதிர்திசையில் கடைசி ரயில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் கார்டன்ஸ் பை தி பே எம்ஆர்டி நிலையத்திலிருந்து கடைசி ரயில் பின்னிரவு 12.25 மணிக்குப் புறப்பட்டு உடலண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும்.
எதிர்திசையில் செல்லும் ரயில் பின்னிரவு 12.02 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் கடைசி ரயில் பின்னிரவு 12.30 மணிக்கு ஹாபர்ஃபிரண்ட் எம்ஆர்டி ரயில் நிலையத்திலிருந்தது புறப்பட்டு பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும்.
எதிர்திசையில் செல்லும் ரயில் பின்னிரவு 12.02 மணிக்குப் புறப்படும்.
டௌன்டவுன் ரயில் பாதைக்கான ரயில் சேவைகள் இயங்கும் நேரமும் நீட்டிக்கப்படுகிறது.
பின்னிரவு 12.03 மணிக்கு புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து கடைசி ரயில் புறப்பட்டு எக்ஸ்போ எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும்.
எதிர்திசையில் செல்லும் ரயில் பின்னிரவு 12.04 மணிக்குப் புறப்படும்.
எல்ஆர்டி சேவையைப் பொறுத்தவரை, செங்காங் மற்றும் பொங்கோல் எல்ஆர்டி பாதைகளில் மட்டுமே சேவை நேரம் நீட்டிக்கப்படும்.
வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் கடைசி ரயில்கள் அவற்றின் இறுதி நிலையத்தை அடையும் வரை இவ்விரு எல்ஆர்டி பாதைகளில் சேவை வழங்கப்படும்.
புனித வெள்ளிக்கு முதல் நாள் இரவில் பேருந்துச் சேவைகள் நீட்டிக்கப்படும் என்று பொதுப் பேருந்துச் சேவை வழங்கும் நான்கு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
வாரயிறுதியில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்ப்பு
அடுத்த வாரயிறுதியில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு சிங் மிங் (ஏப்ரல் 5), புனித வெள்ளி (ஏப்ரல் 7) காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே, அடுத்த வாரயிறுதியில் சிங்கப்பூரிலிருந்து சாலை வழியாக மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் இதைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கேட்டுக்கொண்டது.

