சபிதா ஜெயகுமார்
சமூக சேவை நிறுவனமான ஸ்ரீ நாராயண மிஷன் தனது செயல்பாட்டுத் தேவைகளுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிதி திரட்ட ஸ்ரீ நாராயண மிஷனுக்கு உதவ 'சிக்கி' எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் தொண்டூழிய பிரிவான 'சிக்கி கேர்ஸ்' முன்வந்துள்ளது.
இந்த நிதி திரட்டு நிகழ்ச்சி ஸ்ரீ நாராயண மிஷனின் 75வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் அமைகிறது. அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடும் 'சிக்கி' அமைப்பும் கொண்டாட்ட உணர்வுடன் சமூகத்திற்குச் சேவையாற்றும் வகையில் நிதி திரட்டு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டுள்ளது.
இன்று ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் நடைபெறவிருக்கும் கோல்ஃப் நிதி திரட்டு நிகழ்ச்சியின் மூலம் $375,000 நிதி திரட்டி உதவ 'சிக்கி' அமைப்பு உறுதி
அளித்துள்ளது.
இன்று மாலை இடம்பெறும் விருந்து நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சார்பாக சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு சான் யெங் கிட் கலந்துகொள்கிறார்.
அறநிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மதசார்பற்ற சமூக சேவை அமைப்பான ஸ்ரீ நாராயண மிஷன் 1948ல் நிறுவப்பட்டது. இன, சமய வேறுபாடுகளைப் பாராது பின்தங்கியவர்களுக்குப் பலதரப்பட்ட சமூக சேவைகளை வழங்கி வருகிறது. இதுவரை மூன்று அறநிறுவன வெளிப்படைத்தன்மை விருதுகளை வென்றுள்ளது ஸ்ரீ நாராயண மிஷன். நிதி திரட்டு நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி அதன் தாதிமை இல்லங்களையும் மூத்தோர் பராமரிப்பு நிலையங்களையும் ஸ்ரீ நாராயண மிஷன் சீராக நடத்துகிறது.
இத்தகைய ஓர் அற நிறுவனத்திற்கும் அதன் உன்னத முயற்சிகளுக்கும் ஆதரவு அளிப்பதில் பெருமைப்படுவதாக 'சிக்கி' கூறுகிறது.
"உறுப்பினர்களின் வளர்ச்சியும் மேம்பாடும் எங்களது முதன்மை நோக்கமாக இருந்தாலும் வர்த்தகச் சங்கங்கள் மற்றும் தொழில் சபைகள் சமூக பொறுப்பு இலக்குகளை எட்டவும் உதவுகிறோம். நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கும் 'சிக்கி', நிதி திரட்டும் நிகழ்ச்சி மூலம் சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகைக்குப் பங்காற்றுவது பொருத்தமானது," என்று 'சிக்கி' அமைப்பின் தலைவர் திரு நீல் பரேக் தெரிவித்தார்.
இந்த கோல்ஃப் நிதி திரட்டு நிகழ்ச்சிக்குத் தலைமை வகிப்பவர் 'சிக்கி கேர்ஸின்' தலைவரும் கோல்ஃப் ஆட்டத்தில் அதீத ஆர்வம் உள்ளவருமான சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் துணை தலைவர் திரு
ம.ச. மணியம்.
சமூகத்திற்குத் தேவையான சிறந்த பராமரிப்பையும் உதவிகளையும் வழங்க நிதி திரட்டு முயற்சிகள் பெரும் உதவியாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார் ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன்.

