இந்தோனீசிய பணிப்பெண் பார்ட்டி லியானி மீதான வழக்கில் புதிய திருப்பம்
சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங்கின் மகனான கார்ல் லியூ, மாவட்ட நீதிபதியிடம் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார்.
அவர்களின் இல்லப் பணிப்பெண்ணாக இருந்த திருவாட்டி பார்ட்டி லியானி, தங்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமான சில பொருள்களைத் திருடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் பொய்யுரைத்ததை நேற்று அவர் ஒப்புக்கொண்டார்.
45 வயதாகும் கார்ல் லியூ மீது அரசாங்க ஊழியரிடம் தவறான தகவல் தந்தது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
தற்போது 49 வயதாகும் திருவாட்டி பார்ட்டி இந்தோனீசியாவைச் சேர்ந்தவர். 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் லியூவின் வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாகச் சேர்ந்தார்.
அவரிடம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வீட்டு வேலைகள் மட்டுமன்றி வேறோர் இடத்தில் அமைந்திருக்கும் லியூவின் அலுவலகத்தையும் தூய்மைப்படுத்தும்படி கூறப்பட்டது.
கூடுதல் வேலை செய்வதில் விருப்பமில்லை என்று திருவாட்டி லியானி கூறினார். எனவே 2016 அக்டோபரில் லியூ குடும்பத்தினர் அவரை வேலையிலிருந்து நீக்கினர்.
மூன்று பெட்டிகளில் அவரது உடைமைகளை அடுக்கி வைத்துப் புறப்பட அவருக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது.
தான் இந்தோனீசியா திரும்புவதற்கு முன்பாக மனிதவள அமைச்சிடம் புகாரளிக்கப் போவதாக லியானி மிரட்டல் விடுத்தார். மேலும் தனது உடைமைகள் அடங்கிய பெட்டிகளை இந்தோனீசியா அனுப்புவதற்கான செலவையும் முதலாளி ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் தாயகம் திரும்பிய மறுநாள், தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான பொருள்களையும் பெட்டிகளில் அடுக்கியிருந்ததாக லியானி மீது லியூ குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
2016 டிசம்பரில் சிங்கப்பூர் வந்த லியானி கைது செய்யப்பட்டார். ஈராண்டுகளுக்குமேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர், மேல்முறையீடு செய்ததில் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது கார்ல் லியூ 'பார்க்கின்சன்ஸ் நோய்' எனும் நடுக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

