செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
da2f6047-12bd-4636-ac69-e8ed32b03399
-

மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட மூத்த திடல்தடப் பயிற்றுவிப்பாளர்

மூத்த திடல்தடப் பயிற்றுவிப்பாளர் லோ சியான் பியோ 2013ஆம் ஆண்டு பயிற்சிக்கு வந்த பதின்ம வயதுப் பெண்ணை மானபங்கப்படுத்தியதாகத் தண்டிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று அவரை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2013 பிப்ரவரி 24, மார்ச் 15 ஆகிய தேதிகளில் பயிற்சியின்போது லோ தன்னை மானபங்கப்படுத்தியதாக அப்பெண் கூறினார். பின்னர் 2016 ஜூலை மாதம் காவல்துறையிடம் அப்பெண் புகாரளித்தார். மானபங்கச் சம்பவம் குறித்த விசாரணை 2018ல் தொடங்கியது. லோ மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விசாரணைக்குப் பிறகு ஜூலை 2020ல் லோவிற்கு 21 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டிய பெண்ணின் சாட்சியத்தில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டிய மேல்முறையீட்டு வழக்கின் நீதிபதி லோவை இரு குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தார்.

மிரட்டலுக்கு 'டெலிகிராம்' மூலம் ஆள்சேர்க்கும் டன்முதலைகள்

கடன் முதலைகள் தங்களிடம் கடன் வாங்கியவர்களைத் துன்புறுத்துவதற்கு கவர்ச்சிகரமான ஊதியம் தருவதாக உறுதிகூறி 'டெலிகிராம்' சமூகத் தளத்தின் மூலம் இளையர்களை வேலைக்குச் சேர்க்கின்றனர். இது தொடர்பான விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டது. ஒரு வீட்டின் கதவில் சாயம் தெளிப்பதற்கு $350 தருவதாக அந்த எண்ணில் இருந்து பதில் கிடைத்ததாக அது கூறியது. இருப்பினும் சாயம் தெளித்தது குறித்து காணொளி அனுப்ப வேண்டும் என்றும் அது சரிபார்க்கப்பட்ட பிறகே பணம் தரப்படும் என்றும் ஆடவர் ஒருவர் மலாய் மொழியில் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. ரோஜர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஆடவர், மாதிரிக் காணொளி ஒன்றையும் அனுப்பி வைத்தார். முகக்கவசம், கையுறைகளை அணிந்து சாயம் தெளிக்கும்படியும் அவர் ஆலோசனை கூறினார். அதிகமானோர் இவ்வேலையைச் செய்கிறார்களா என்ற கேள்விக்கு, "இவ்வேலை மூலம் இளையர்கள் எளிதாகப் பணம் ஈட்டலாம். நான் யாரையும் வற்புறுத்துவதில்லை. பணத்துக்காக அவர்களாகவே இவ்வேலையைச் செய்கின்றனர்," எனக் கூறியதாகத் தெரிகிறது.