பூகிஸ் வட்டாரத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் தொடர்பில் மூன்றாவது நபர்மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூரரான முகமது குஃப்ரான் சினார்ஃபத்லி எனும் 22 வயது ஆடவர் சென்ற ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
அவ்வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் விசாரணைக்கு வரத் தவறியதால் ஆடவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
பூகிஸ் தாக்குதல் வழக்கில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள 18 வயதுச் சிறுவன் 2021ஆம் ஆண்டு நடந்த தாக்குதலின் தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டவர்.
அப்போது அவர் வயது 17 என்பதால் இந்தோனீசியரான அச்சிறுவனைப் பற்றிய மேல்விவரங்களை வெளியிட இயலாது.
பூகிஸ் தாக்குதல் தொடர்பில் சிங்கப்பூரரான 25 வயது நூர்லியானா ஹஸுலியானி எனும் பெண் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூவரும் கடந்த திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் ஓர் ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.

