சிங்கப்பூரில் உள்ள பயனீட்டாளர்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் குறைவான மின்கட்டணத்தைக் கட்டுவர். மின்கட்டணம் முதல் காலாண்டில் இருந்து சராசரியாக 5.4 விழுக்காடு குறைந்துள்ளது.
அதன் காரணமாக குடும்பங்கள் இன்று ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை ஒரு கிலோவாட் மின்கட்டணம் 27.43 காசாகக் குறையும். இது இதற்கு முன்னர் 28.95 காசாக இருந்தது என்று மின்சார விநியோக நிறுவனமான எஸ்பி குழுமம் நேற்று தெரிவித்தது.
முந்திய காலாண்டோடு ஒப்பிடுகையில் எரிசக்திச் செலவு குறைந்திருப்பதால் ஒரு கிலோவாட் மின்சாரத்திற்கு 1.51 காசு குறையும். இது சராசரியாக 5.4 விழுக்காடு குறைவு.
இந்தக் கணக்கீட்டில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. ஜிஎஸ்டியைச் சேர்த்துக் கணக்கிட்டால் புதிய கட்டணம் 29.62 காசாக இருக்கும். ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடையில் இந்தக் கட்டணம் 31.27 காசாக இருந்தது. இதன் அடிப்படையில் பார்த்தால், நான்கறை வீவக வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் சராசரி மாதாந்திர மின்கட்டணத்தில் (ஜிஎஸ்டி சேர்க்காமல்) $4.69 மிச்சப்படும்.
சராசரியாக மாதந்தோறும் 308.52 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நான்கறை வீவக வீட்டில் வசிக்கும் குடும்பத்திற்கான மின் கட்டணம், ஜிஎஸ்டி சேர்க்காமல் $89.32 என்பது நேற்று வரையிலான நிலவரம். இன்று முதல், அதே மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணம் $84.63 ஆகக் குறையும்.
தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக இங்கு மின்கட்டணம் குறைந்துள்ளது. இதற்கு முன்னர், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக 2021 ஏப்ரல் முதல் மின்கட்டணம் உயர்ந்து வந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு முதல் கிலோவாட் மின்சாரத்திற்கான கட்டணம் 0.43 விழுக்காடு என்னும் கணக்கில் மெதுவாகக் குறையத் தொடங்கியது.
இதர செலவுகள் கூடியுள்ளபோதிலும் எரிசக்திச் செலவுகள் கிலோவாட்டுக்கு 1.86 காசு குறைந்துள்ளதாகவும் அந்த சரிவு மின்கட்டணத்தில் எதிரொலிப்பதாகவும் எஸ்பி குழுமம் கூறியது.
மின்சாரக் கட்டணத்தில் 75.4 விழுக்காடு எரிசக்திச் செலவு அடங்கி உள்ளது. மின் பகிர்வு வாயிலாக மின்சாரத்தை அனுப்பும் செலவு உள்ளிட்ட பிற செலவுகள் கட்டணத்தின் இதர பகுதியைச் சார்ந்தவை.
எரிவாயு கட்டணமும் குறைகிறது
இதற்கிடையே, வீடுகளுக்கான எரிவாயுவின் விலை கிலேவாட்டுக்கு 0.16 காசு குறையும் என்று குழாய் மூலம் எரிசக்தி விநியோகிக்கும் சிட்டி எனெர்ஜி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இதன் காரணமாக இன்றுமுதல் ஜூன் 30 வரை ஒரு கிலோவாட் எரிவாயுவின் விலை 21.84 காசு என்பதிலிருந்து 21.68 காசாகக் குறையும்.
இதனுடன் ஜிஎஸ்டியை சேர்த்துக் கணக்கிட்டால் புதிய கட்டணம் 23.41 காசாக இருக்கும். எரிபொருள் விலைகள் குறைந்ததால் எரிவாயுவின் விலையும் சிறிய அளவில் குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்திச் செலவு குறைந்ததால் 5.4% கட்டணம் குறையும்