வாட்ஸ்அப் குழு மூலம் 17 ஆபாசக் காணொளிகளைப் பகிர்ந்துகொண்ட அதன் நிர்வாகியான இலங்கை நாட்டவருக்கு நேற்று 18 மாதங்கள், இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான ஹின்டாகும்புரே சாரிந்து தில்ஷாம் ராஜபக்ஷா, சிறார் பாலியல் உறவில் ஈடுபடும் காணொளிகள் உட்பட பல்வேறு ஆபாசக் காணொளிகளைப் பகிர்ந்துகொண்டதை மார்ச் 2ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டதாக நம்பப்படும் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்வது, வயது வராத குழந்தையொன்று விலங்குடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காணொளிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 25 வயது இலங்கை நாட்டவருக்கு ஏற்கெனவே 2022 பிப்ர வரியில் ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹின்டாகும்புரே இரண்டாவது நபர் ஆவார்.
சென்ற செவ்வாய்க்கிழமை அன்சாரி அப்துல் அமினுக்கு, 36, 13,600க்கும் மேற்பட்ட ஆபாச கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹின்டாகும்புரே, விருந்தோம்பல் நிர்வாகத் துறையைப் படிப் பதற்காக சிங்கப்பூர் வந்ததாக அரசுத்தரப்பு குறிப்பிட்டது.
ஆனால் அவர் எப்போது வந்தார் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.
2019க்கும் 2020க்கும் இடையே ஹின்டாகும்புரேவும் அவருடன் தங்கியிருந்த ஆறு நண்பர்களும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினர். இக்குழுவை நிர்வகித்த எழுவரில் இவரும் ஒருவர்.
ஹின்டாகும்புரே, 2020 மார்ச் 16க்கும் ஜூலை 26க்கும் இடையே 943 ஆபாசக் காணொளிகளை குழுவில் பகிர்ந்துகொண்டார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி லாவண்டர் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே சந்தேகத் திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளையரை பொதுப்போக்கு வரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அவரது கைப்பேசியைச் சோதனையிட்டபோது வாட்ஸ்அப் குழுவொன்றில் ஏராளமான ஆபாசக் காணொளிகள் பகிர்ந்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழுவின் நிர்வாகியான ஹின்டாகும்புரே அடையாளம் காணப்பட்டார்.