கோழிகள் கொத்தி காயம் அடைந்த நான்கு ஆமைகளை தேசிய பூங்காக் கழகம் மீட்டுள்ளது. அங் மோ கியோ சமூகப் பண்ணையில் ஆமைகள் வளர்க்கப்படும் விதம் குறித்து சிலர் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து கழகம் நடவடிக்கை எடுத்தது.
திரு கய் கன்சிக்லியரேவும் 58, அவரது மனைவியும் வளர்ப்பு மீன் தொட்டிகளை விற் பதற்காக அங் மோ கியோ தொழில்பேட்டை 2ல் உள்ள கடைக்குச் சென்றனர். அப்போது பக்கத்தில் இருந்த பண்ணையில் ரத்தம் வழிந்துகொண்டிருந்த ஆமையைக் கண்டனர். ஆமையின் ஓட்டின் மீது ரத்தம் வழிந்துகொண்டிருந்த இடத்தில் கோழிகள் கொத்திக் கொண்டிருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொழிற்பேட்டையில் ஏழு புளோக்குகள் அளவுக்குப் பரந்துள்ள சமூகப் பண்ணையை அங் மோ கியோ தொழிற்பேட்டை 2ன் சங்கத்தினர் உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் மீட்கப்பட்ட நான்கு ஆமைகள் தங்களுடைய பராமரிப்பில் இருப்பதாக தேசிய பூங்காக் கழகம் நேற்றைய அறிக்கையில் தெரிவித்தது.

