இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கான ஒன்பது மாடி நிலையம் உட்லண்ட்சில் திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய இறுதிச் சடங்கு நிலையமான இது, தென்கிழக்காசியாவில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் இறுதிச் சடங்கு நிலையமும் ஆகும்.
இறுதிச் சடங்கு சேவைகளுக்கும் அவற்றுக்கான இடங்களுக்கும் சிங்கப்பூரில் தேவை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஒன்றாக புதிய இறுதிச் சடங்கு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் மெமோரியல் காம்ப்பிளக்ஸ் என்றழைக்கப்படும் இந்நிலையம் உட்லண்ட்ஸ் தொழிலியல் பூங்காவில் அமைந்துள்ளது.
இந்நிலையத்தில் 14 இறுதிச் சடங்கு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எல்லா சமயத்தினருக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு மண்டபத்திலும் குறைந்தபட்சம் 60 பேர் இருக்கலாம். மண்டபங்கள் இணைக்கப்படும்போது அவற்றில் அதிகபட்சமாக 1,000 பேர் இருக்கலாம்.
இந்நிலையம் 24 மணிநேரமும் செயல்படும். இதன் பரப்பளவு 10,000 சதுர மீட்டர்.
இங்குள்ள சூரிய சக்தித் தகடுகள் 168,000 கிலோவாட் மணிநேர எரிசக்தியை உற்பத்தி செய்யும். இதைக் கொண்டு ஓர் ஆண்டில் 866 நான்கறை வீவக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கலாம்.
நிலையத்தின் மூன்று மாடிகளில் இறுதிச் சடங்குக் கூடங்கள் அமைந்துள்ளன. இரண்டு மாடிகளில் அஸ்தி மாடங்கள் இருக்கின்றன.
மூன்று மாடிகளில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே 170க்கும் அதிகமான வாகனங்களை நிறுத்தலாம்.
இவற்றோடு, பூங்காவில் அமைக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட அஸ்தி மாடமும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த வளாகத்தின் ஓர் அங்கமாக செயல்படும்.
சிங்கப்பூரில் மூப்படையும் சமூகம் பெருகி வருவதால் வரும் ஆண்டுகளில் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கையாள அடுத்த 10 ஆண்டுகளில் நான்கு இறுதிச் சடங்கு நிலையங்களை அமைக்க தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட்டுள்ளது.
அவற்றில் முதலாவது உட்லண்ட்ஸ் இறுதிச் சடங்கு நிலையம்.
2020ஆம் ஆண்டில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை சுமார் 22,000. 2040ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை சுமார் 40,000க்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக உட்லண்ட்ஸ் இறுதிச் சடங்கு நிலையத்தின் பொது மேலாளர் பென் ஹாவ் சுட்டினார்.
"அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இறுதிச் சடங்கு நிலையங்களில் உணரப்படுவதாகச் சொல்லப்படும் கவலை உணர்வு இல்லாத வகையிலும் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது," என்று செய்தியாளர்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் திரு ஹாவ் குறிப்பிட்டார். மாண்டோரின் குடும்பத்தார் உள்ளிட்டோரின் வருத்தத்தையும் அச்சத்தையும் குறைக்கும் நோக்குடன் இறுதிச் சடங்கு மண்டபங்களின் வெளிப்புறங்களில் மனத்திற்கு இதமான தாவர வகைகள் வைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் போ கூறினார்.
குடும்பங்களுக்கான ஓய்வு அறைகள், குளியலறைகள் போன்றவையும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.