தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட மும்மடங்காகியுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் 11 புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதிலிருந்து இப்பாதையில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை, சிங்கப்பூரின் வடக்குப் பகுதியையும் நகரின் மத்தியப் பகுதியையும் இணைக்கிறது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இப்பாதையில் 60,000 பேர் பயணம் செய்தனர். புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அந்த எண்ணிக்கை 160,000க்கு அதிகரித்தது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் புதிதாகத் திறக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மேக்ஸ்வெல், கிரேட் வோர்ல்டு ஆகியவற்றில்தான் ஆக அதிகமான பயணிகள் ரயில் சேவைகளைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையைக் கணக்கிடும்போது முனையங்களாக விளங்கும் ரயில் நிலையங்கள் கருத்தில்கொள்ளப்படவில்லை.
புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டதிலிருந்து ஆர்ச்சர்ட், ஊட்ரம் ரயில் நிலையங்கள் இரண்டிலும் ரயில் சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 10 விழுக்காடு கூடியதென நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.