மண்டாய் வட்டாரக் கிடங்கு ஒன்றிலிருந்து 85,000க்கு மேற்பட்ட மின்சிகரெட்டுகளையும் அவற்றைப் பயன்படுத்தத் தேவைப்படும் கருவிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை கைப்பற்றப்பட்ட ஆக அதிக மின்சிகரெட்டுகள் அவை.
சென்ற மாதம் 29ஆம் தேதி நடந்த சோதனை நடவடிக்கையில் 20 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
மின்சிகரெட்டுகள் கடத்தலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐவரும் விசாரணையில் உதவி வருவதாகக் கூறப்பட்டது.
சோதனை நடவடிக்கை 72 மணி நேரத்துக்குமேல் நீடித்ததாகவும் சட்டவிரோத மின்சிகரெட் விநியோகச் சங்கிலி துண்டிக்கப்பட்டதாகவும் காவல்துறையும் ஆணையமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பை அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட $2.2 மில்லியன் மதிப்பிலான மின்சிகரெட்டுகளைவிட அதிகமான மின்சிகரெட்டுகள் மண்டாய்க் கிடங்கில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்ற மாதம் 28ஆம் தேதி புளோக் 592, மாண்ட்ரீல் லிங்க்கில் உள்ள அடுக்கு மாடி கார் நிறுத்துமிடத்தில் இருந்து உதவிகேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அதிகாரிகள் அங்கு சென்றபோது மின்சிகரெட்டுகள் அடங்கிய பொட்டலங்களை வேன் ஓட்டுநர் ஒருவர் ஐந்து பேரிடம் தருவதைக் கண்டனர். அந்த ஐந்து பேரும் மின்சிகரெட்டுகளை வாங்கியோரிடம் அவற்றை விநியோகிப்பவர்கள் எனத் தெரியவந்தது.
தடுத்து வைக்கப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மண்டாய் கிடங்கு குறித்துத் தெரியவந்தது.
அரசாங்க ஊழியர் தன் கடமையை ஆற்றுவதைத் தடை செய்ததன் தொடர்பில் 27 வயது வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தங்களிடமிருந்த இயந்திரங்களைக் கடுமையாகப் பயன்படுத்தியது தொடர்பில் அவரும் 26 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கார் நிறுத்துமிடத்தில் காணப்பட்ட மேலும் நான்கு இளையர்களும் விசாரணையில் உதவி வருகின்றனர்.
தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலைப் பொருள்களையோ அவற்றுக்கு நிகரானவற்றையோ இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், விற்க முயலுதல் ஆகியவை சட்டவிரோதமாககக் கருதப்படும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.
குழாயின் மூலம் புகைக்கப்படும் 'ஷிஷா' புகையிலை, புகை வெளிவிடாத புகையிலை, மெல்லக்கூடிய புகையிலை, மின்சிகரெட்டுகள், அவற்றைப் பயன்படுத்துவதற்கான கருவிகள் போன்றவையும் இவற்றில் அடங்கும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல்முறை குற்றம் செய்தோருக்கு $10,000 வரையிலான அபராதமோ ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு இரு மடங்கு தண்டனை விதிக்கப்படக்கூடும்.

